ஆண்டிபட்டி :மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளது. ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் சுனை நீர் இக்கோயிலின் சிறப்பு. சுனை நீரில் குளித்து வேலப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் தேனி மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி, காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.பங்குனி கடைசி நாளில் வெளியூர் பக்தர்கள் கோயில் வளாகத்திற்கு வந்து விடுவர்.விழா ஏற்பாடுகள் குறித்து கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கோயில் விழா குறித்து ஹிந்து அறநிலையத்துறை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் படிக்கட்டு சுவர்களில் வர்ணம் பூசுதல், வாகனங்களுக்கான பார்க்கிங், பக்தர்கள் சமையல் செய்வதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. தற்போது காவடி, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் கோயிலில் கங்கணம் கட்டி செல்கின்றனர் என்றார்.