பதிவு செய்த நாள்
09
ஏப்
2021
04:04
சென்னை- உலகில் பசி, நோய் நீங்கி, அமைதியாக இருக்க வேண்டி, சென்னையில், பன்னிரு திருமுறை நிகழ்ச்சி நடக்கிறது.வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ தியாகப்பிரம்ம கான சபா மற்றும் எஸ்.பி.எஸ்.கே.சி., அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், 15ம் ஆண்டு பன்னிரு திருமுறை நிகழ்ச்சி, சென்னை, தி.நகர், வாணி மகாலில், நேற்று முன்தினம் துவங்கியது.இந்த நிகழ்ச்சி, நாளை மறுநாள் வரை, தினமும் மாலை, 3:00 மணி முதல், 8:30 மணி வரை நடக்கிறது.கர்நாடக இசைஇதன் துவக்க விழா நிகழ்ச்சியில், ஸ்ரீ தியாகப் பிரம்ம கான சபாவின் தலைவர் டெக்கான் மூர்த்தி பேசியதாவது:இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், இசைக் கலைஞர்கள் ஆதரவு இன்றித் தவிக்கின்றனர். கோவில் ஓதுவார் உள்ளிட்ட இசைவாணர்களை அழைத்து, ஆதரவு அளித்து, இது போன்ற விழாக்களை நடத்துவது மிகச் சிறந்த சேவை. இதுபோன்ற கலைத் தொண்டுகளை, ஸ்ரீ தியாகப் பிரம்ம கான சபா தொடர்ந்து செய்து வரும்.இவ்வாறு அவர் பேசினார்.கிளீவ்லேண்ட் வி.வி.சுந்தரம் பேசியதாவது:நம் தமிழ் இசை மிகவும் பழமையானது. ஐவகை நிலங்களுக்கும் ஐவகைப் பண்கள் இருந்ததைப் பற்றி தொல்காப்பியம் விளக்குகிறது.இதிலிருந்தே, தமிழ் இசை, சங்க காலத்திற்கும் முற்பட்டது என்பது தெளிவாகிறது. இந்த தமிழ் இசையைத் தழுவித் தான், விஜய நகர, நாயக்கர் காலத்தில் கர்நாடக இசை தோன்றியது. அவ்வளவு பாரம்பரிய சிறப்பு மிக்க தமிழிசையை, இது போன்ற விழாக்களில் தான் காண முடிகிறது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள், ஐ.பி.எஸ் அதிகாரி ராமகிருஷ்ணன் பேசுகையில், தற்போதைய விரைவான வாழ்க்கையில், பக்தியையும், ஞானத்தையும் வளர்க்க, இதுபோன்ற திருமுறை இசையும், சத்சங்கமும் தேவையானதாக உள்ளது, என்றார்.நேரலைதிருவொற்றியூர் பாரதி பாசறையின் நிறுவனர் மா.கி.ரமணன் பேசுகையில், இந்த கொரோனா தொற்று காலத்தில் தேவாரமும், திருவாசகமும் கேட்டால், நோயும், நோய் பற்றிய பயமும் நீங்கும். துயர் தீர நால்வர் பாடிய பதிகங்களை, இன்றும் நாம் கேட்டால், மனம் அமைதியடையும், என்றார்.வாசகர்கள், நாளை மறுதினம், தினமும் மாலை, 3:00 மணி முதல், 8:30 மணி வரை நடக்கும் பன்னிரு திருமுறை சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகளை, தினமலர் இணைய தொலைக்காட்சியில் நேரலையாக கண்டு ரசிக்கலாம்.