மானாமதுரை : தமிழகத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருவதால் திருவிழாக்கள்,மதம் சார்ந்த கூட்டங்களுக்கு முதல் தடை விதித்துள்ளதால், மானாமதுரையில் சித்திரை திருவிழாவிற்கும் தடைவந்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு பிப்., மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு இந்தாண்டு வரை நீடித்து வருகிறது.மேலும் தற்போது கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து நேற்று தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மானாமதுரையில் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டாவது நடக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் தமிழக அரசு திருவிழா, மதம் சார்ந்த கூட்டத்திற்கு தடைவிதித்தது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். கடந்த ஆண்டே நடக்காத நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக நடக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ஆண்டும் தடை விதித்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.