கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி விழா இந்த ஆண்டு ஏப்ரல் 27 ல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். இரு மாநில பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 27 ல் விழா நடைபெறுவதற்கான எவ்வித முன்னேற்பாடுகளையும் தேனி, இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை செய்யவில்லை. விழா நடைபெறுவதற்கு முன்பு தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகளின் படி கொண்டாடப்படும். விழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இதற்கான எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால் விழா நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.