ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பங்குனி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் திரண்டிருந்தனர். காலை 6 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் இருந்தபோதிலும் பக்தர்கள் ஆங்காங்கே ஓய்வெடுத்து மலையேறினர். மதியம் 12 மணி வரை சுமார் 9 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மலையில் சந்தனமகாலிங்க சுவாமி, சுந்தரமகாலிங்க சுவாமி. சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடுகள் துவங்கியது. 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் காட்சி அளித்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்பதால் உடனடியாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதனை ஏற்று பக்தர்கள் உடனடியாக தாணிப்பாறை அடிவாரம் திரும்பினர். வத்திராயிருப்பு மற்றும் பேரையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.