பதிவு செய்த நாள்
11
ஏப்
2021
10:04
தொண்டாமுத்தூர்: மருதமலை கோவில் மலைப்பாதையில், இரவு, 7:00 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. நேற்று முதல், இரவு, 8:00 மணிக்கு அனைத்து கோவில்களும் நடை அடைக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, வெப்பநிலை பரிசோதித்து, கிருமி நாசினி வழங்கப்படுகிறது. முக கவசம் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு, அனுமதி மறுக்கப்படுகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாலை, 6:00 மணிக்கு மேல், படிக்கட்டு பாதை வழியாகவும், இரவு, 7:00 மணிக்கு மேல், மலைப் பாதை வழியாகவும் பக்தர்கள் செல்ல, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இரவு, 8:00 மணிக்கு கோவில் நடை அடைக்க வேண்டும் என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.