பதிவு செய்த நாள்
12
ஏப்
2021
05:04
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில், இன்று காலை முதல், இரவு வரை, சுவாமி தரிசனத்துக்கு மட்டும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் கதிரவன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் கம்பங்களுக்கு தண்ணீர், பால் ஊற்ற அனுமதி இல்லை. இன்று காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பூஜை பொருட்களுக்கு அனுமதியில்லை. அதேசயம் கம்பம் எடுத்தல் நிகழ்வு, நாளை மாலை 3:00 மணி என்பது, அதிகாலை, 5:00 மணிக்கு மாற்றப்படுகிறது. இதில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி. கம்பம் எடுக்கும் நிகழ்வு நடத்தப்பட்டு, மூன்று கம்பங்களும் வாகனத்தில் ஏற்றப்பட்டு, காவிரி ஆற்றில் விடப்படும். மக்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கம்பம் செல்லும் பாதை: பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் கம்பம், நாளை (திங்கள்) அதிகாலை, 5:00 மணிக்கு ஒரே நேரத்தில் பிடுங்கப்பட்டு, மணிக்கூண்டில் ஒன்று சேர்ந்து லாரியில் ஏற்றப்படுகிறது. அங்கிருந்து அக்ரஹார வீதி, மகாசன பள்ளி வழியாக, கச்சேரி வீதி, பி.எஸ்.பார்க், ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, ஸ்வஸ்திக் ரவுண்டானா, எல்லை மாரியம்மன் கோவில் சாலை சந்திப்பு, மஜீத் வீதி, கருங்கல் பாளையம் வழியாக சென்று, காவிரி ஆற்றில் விடப்படுகிறது. கம்பம் எடுத்து செல்லப்படும் வாகனம் எங்கும் நிறுத்தப்படமாட்டாது. அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து விடும். இதில், 20 பேர் மட்டுமே பங்கேற்பர். கொரோனா தடுப்பு விதிமுறையை கடைப்பிடித்து, கம்பத்தை பக்தர்கள் தரிசனம் மட்டும் செய்யலாம். இத்தகவலை, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.