கீழக்கரை: கொரோனா தொற்று காரணமாக மத்திய, மாநில அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டி அரசின் தலைமைச் செயலாளருக்கு ராமநாதபுரம் மாவட்ட காஜியார் மவுலானா சலாவுதீன் ஜமாலி மனு அனுப்பியிருந்தார். அது குறித்த செய்தி ஏப்., 10 தினமலர் நாளிதழில் வெளியானது. மேலும் அவர் கூறியதாவது;
ஏப்., 13 அல்லது ஏப்., 14 முதல் முஸ்லிம்களுக்கு புனித ரமலான் மாதம் துவங்கவுள்ளது. முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இரவு இரண்டு மணி நேரம் தராவீஹ் என்னும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். அதற்கான நேரம் இரவு 8 மணி அளவில் தான் ஆரம்பமாகிறது. எங்களின் கோரிக்கையை ஏற்று அரசு கூடுதலாக இரவு 10 மணிவரை, முந்தைய நேர கட்டுப்பாட்டை தளர்த்தி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்திட இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்படும் என அரசு அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும், அரசின் முதன்மைச் செயலாளர், தினமலர் நாளிதழுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.