பதிவு செய்த நாள்
13
ஏப்
2021
08:04
டேராடூன் : கும்ப மேளா நிகழ்ச்சியை முன்னிட்டு, உத்தரகண்டில் குவிந்த பக்தர்கள், கொரோனா குறித்த கவலையின்றி, கங்கை நதியில் நேற்று புனித நீராடினர். உத்தரகண்டில், முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளாவில், லட்சக்கணக்கானோர், புனித கங்கை நதியில் நீராடுவது வழக்கம். இதன்படி, கும்ப மேளாவில், பல்வேறு மடங்களைச் சேர்ந்த சாதுக்கள், பிரம்ம குண்டம் என, அழைக்கப்படும் ஹரி கி பைரி பகுதியில், நேற்று கங்கையில் நீராடினர்.
பாதயாத்திரையாக வந்து, புனித நீராடிய சாதுக்கள் மீது, மாநில அரசு தரப்பில், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்பட்டன. இது தவிர, கங்கையின் பிற இடங்களில் லட்சக்கணக்கானபக்தர்கள் புனித நீராடினர். மாநில அரசு தகவல்களின்படி, 17.31 லட்சத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கும்ப மேளாவை முன்னிட்டு நேற்று கங்கையில் புனித நீராடினர். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இவர்களில் யாரும் முக கவசம், சமூக இடைவெளி உட்பட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை.