பதிவு செய்த நாள்
11
ஜூன்
2012
10:06
அவலூர்பேட்டை: மேல்மலையனூர் அக்னி குளத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் புனரமைப்பு செய்து கொடுத்திட, அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மாசி திருவிழாவின் போது பெங்களூரு, தமிழக பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் இங்குள்ள புனித அக்னி குளத்திலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கின்றனர். இந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அக்னி குளத்தில், பக்தர்கள் குளிக்கும் போது அடிக்கடி கால் தவறி விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குளப்பகுதி புதை குழிபோல் உள்ளிழுக்கும் வகையில் சேறும், சகதியுமாக உள்ளது.இக்குளம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தான் இதை பயன்படுத்துகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூன்று பக்கங்களிலும் பக்தர்கள் இறங்குவதற்கு வசதியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் படிகள் கட்டப்பட்டது. குளத்தின் அருகே ஊராட்சி மூலம் கட்டண கழிவறை மற்றும் குளியலறை கட்டினர். இதனை மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, கோவில் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஆனால் கோவில் நிர்வாகம் அக்னி குளத்தை மட்டும் கண்டு கொள்ளவில்லை. குளத்தை சீரமைக்க இரு தரப்பிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் நாளுக்கு நாள் பாழடைந்தும், ஆக்கிரமிப்புகளுக்குள் சிக்கியும் வருகிறது. குளத்திற்குள் பெரிய பாறை கற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இவைகளை அப்புறப்படுத்தி தூர் வாரி ஆழப்படுத்திடவும், அனைத்து புறத்திலும் படித்துறை அமைக்க வேண்டும். குளம் பார்ப்பதற்கு அழகாகவும், படிக்கற்கள் நிறைந்தும் அமைய வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க பாதுகாப்பு வேலியும் அமைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.பிரசித்தி பெற்ற கோவில் ஸ்தலம் அமைந்துள்ள பகுதியில் இந்த புனித குளம் சீரமைக்கப்படாமல் அப்படியே விட்டு வைத்துள்ளது குறித்து பக்தர்கள் பலரும் வேதனைப்படுகின்றனர். பக்தர்கள் லட்சக்கணக்கான பணம், நகைகள் ஆகியவைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அம்மனை தரிசிக்கவும், அபிஷேக கட்டணம் மற்றும் தலைமுடி, கட்டண குளியலறை, கழிவறை உள்ளிட்ட பல வகைகளில் கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து அக்னி குளத்தை புனரமைக்க முன் வரவேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.