பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
10:04
மதுரை,: நோய் தாக்கம் ஜூனில் குறையும் என, பிலவ தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. பிலவ ஆண்டு பிறந்ததை முன்னிட்டு, நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், முதல் ஸ்தானீக பட்டர் ஹாலாஷ்ய நாத பட்டர், அம்மன், சுவாமி சன்னிதியில் பஞ்சாங்கத்தை வைத்து பூஜித்து, அதன் பலன்கள் குறித்து வாசித்தார்.
அவர் கூறியதாவது: பிலவ ஆண்டில், குறைந்த மழை பெய்யும். தொற்று நோய்கள் அதிகரிக்கும். நாட்டில் பொய், சூது அதிகரிக்கும். அரசின் நடவடிக்கையால் மக்கள் புண்படுவர். நலமற்ற வாழ்வு உண்டாகும். நான்கு கால் பிராணிகள் நோயால் நாசமடையும்.வேளாண் தொழில் குறையும். பசுக்களுக்கு நோய் ஏற்பட்டு, பால் உற்பத்தி குறையும். நாட்டில் சுமுகமான சூழல் நிலவாது.இவ்வாறு, அவர் கூறினார். இந்த பலன்கள் பலிக்கக் கூடாது. எழுத்து வடிவமாகவே இருந்துவிட வேண்டும் என அம்மன், சுவாமி சன்னிதியில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் முடிந்ததும், கோவில் குருக்கள் சிவமணி பஞ்சாங்கம் வாசித்து கூறியதாவது:இந்தாண்டு வங்க கடலில், 15 காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, ஒன்பது பலவீனமாகி, ஆறு புயலாக வீசும். தமிழகத்தில் அனைத்து அணைகளும் நிரம்பும்; விவசாயம் பெரிதும் பாதிக்கும்.உலகளவில் கல்வி வளர்ச்சியில் இந்தியா முதலிடம் பிடிக்கும். சீனா, பாகிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை ஏற்படும். பல புதிய நோய்கள் தாக்கும். இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தின் பலன்கள்: நெல், தானியங்கள் உள்பட அனைத்து விளைச்சல்களும் அதிகளவில் இருக்கும். நோய் தாக்கம், ஜூனில் முற்றிலும் அகலும். புதிய கொடிய நோய்கள் இல்லை. அனைவரும் கல்வியில் சிறந்த மேன்மை அடைவர். மக்கள் சுபிட்சம் பெறுவர். சனிப்பெயர்ச்சி இல்லை. குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி உண்டு. கிரஹணங்கள் இல்லை. இயற்கை இடர்பாடுகள் இல்லை. கால நிலை சீராக இருக்கும். எண்ணெய் சார்ந்த தொழில்கள் ஏற்றம் இருக்கும். மேஷம், விருச்சிகம், கடக ராசிகள் அதிக நன்மை பெறும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.