சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷூ தரிசனம் நேற்று கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
குமரி மாவட்ட கோயில்களிலும் கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை ஏப்.,10 மாலை திறக்கப்பட்டது. 11ந் தேதி முதல் உஷபூஜை, உச்சபூஜை, உதயாஸ்மனபூஜை, தீபாராதனை, படிபூஜை, அத்தாழபூஜை போன்றவை நடைபெற்று வருகிறது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7:00 மணி வரை கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கனி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி ஆகியோர் நாணயங்களை கை நீட்டம் வழங்கினர். ஏப்.,18 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
குமரியில் கனி நிகழ்ச்சி: குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி, கன்னியாகுமரி பகவதி அம்மன், நாகர்கோவில் நாகராஜ, மண்டைக்காடு பகவதி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.உடல் வெப்ப பரிசோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோயில்களில் தரிசனம் செய்தனர்.