பதிவு செய்த நாள்
19
ஏப்
2021
01:04
புதுச்சேரி : கொரோனா தொற்று நோயை உலகத்தை விட்டு முழுமையாக விரட்ட பஞ்சவடீ ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.
புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீ சேஷத்திரத்தில் வலம்புரி ஸ்ரீமகா கணபதி, பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் பட்டாபிஷேக பரிவாரங்களாகிய சீதா, லட்சுமணன், பரதன், சத்ருகணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், விபீஷணன், அனுமன் மற்றும் பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி சன்னதியில் 17ம் தேதி முதல் ஸ்ரீராமநவமிஉற்சவம் துவங்கி நடந்து வருகிறது. இந்த உற்சவம் 21ம் தேதி வரை நடக்கிறது.
கொரோனா தொற்று நோய் உலகத்தை விட்டு முழுமையாக விரட்டப்படவும், உலக மக்களின் நன்மைக்காகவும் பஞ்சவடீ கோவிலில் லட்சார்ச்சனை 17ம் தேதி துவங்கியது. இரண்டாம் நாளாக நேற்றும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் நடந்தது. நாளை 20ம் தேதியுடன் லட்சார்ச்சனை முடிகிறது. 21ம் தேதி காலை 8 மணிக்கு பட்டாபிஷேக ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு பாலாபிஷேகம் மற்றும் வாசனை திரவியங்களுடன் திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் செய்து வருகிறது.