ராமனை இராமன் என்று முழுமையாக எழுதுவர். இரா என்றால் இரவு. மன் என்றால் தலைவன். இரவுக்கு தலைவன் சந்திரன். சந்திரனைப் போல் குளிர்ந்த முகத்துடன் அருள்பவர் என்பதே ராமனின் பொருள். ஆம்... அவர் பறவைக்கும், குரங்குகளுக்கும், அணிலுக்கும் கூட அருள் செய்தவர். ராவணன் ஆயுதம் இழந்து நின்ற போது உயிர்பிச்சை தந்த கருணையாளர். வால்மீகி ராம மந்திரத்தை மரா என்றே உச்சரித்தார். அவர் மரா..மரா..மரா என வேகமாகச் சொல்லும் போது, அது இயற்கையாகவே ராம என மாறி விட்டது. ராம மந்திரத்தைமரா என்று சொல்ல ஆரம்பிப்பது இரட்டிப்பு பலன்தரும். மரா என்றால் போக்கடிப்பது, நீக்குவது என்று பொருள். பாவத்தைப் போக்கும் மந்திரம் ராம மந்திரம். ராம என்று சொல்லும் போது, ரா என்ற எழுத்துக்கு உதடுகள் திறக்கும். ம என்ற எழுத்தின் உச்சரிப்பின் துவக்கத்தில் மூடிக் கொள்ளும். அதாவது, இந்த மந்திரத்தால் உள்ளிருந்து வெளியே சென்ற பாவம் மீண்டும் நம்மை அண்டுவதில்லை. உத்தமமான ராமநாமம் சொல்லுங்கள். பாவத்தில் இருந்து விடுதலையும், அதனால் இவ்வுலக வாழ்வில் செல்வவளம் உண்டாகும்.