தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பிரமோற்ச விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக திகழ்வது சுவாமிமலை முருகன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரமோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி நேற்று காலை இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது. அப்போது கொடி மரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளினர். பின்னர் விநாயகர், சண்டிகேஸ்வரருடன் சுப்பிரமணியசுவாமி மலைக்கோவிலிலிருந்து உற்சவ மண்டபத்துக்கு எழுந்தருளினர். சித்திரை பிரமோற்ச விழா துவங்கியதும், நாளை (21-ம் தேதி) காலை முதல் 29ம் தேதி வரை காலை பல்லக்கில் சுவாமி புறப்பாடும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறவுள்ளது. குறிப்பாக வரும் 24-ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும், 27-ம் தேதி வெண்ணெய்தாழி அலங்காரத்தில் சுவாமி புறப்பாடும், 28-ம் தேதி இரவு ரதஹோரகனத்தில் சுவாமி புறப்பாடும், 29-ம் தேதி இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.