கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* உலகாளும் நாயகனே! ராமச்சந்திரனே! சூரிய குலத்தில் உதித்தவனே! அமிர்தமான ராம என்னும் திருநாமம் கொண்டவனே! அபயம் அளிப்பவனே! அகலிகையின் சாபம் தீர்த்தவனே! குளிர்ச்சி மிக்க நிலவு போல பிரகாசிப்பவனே! பிறவிக் கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வ வளம் தருவாயாக.* ஜானகியின் பிரியனே! அனுமனுக்கு வாழ்வு அளித்தவனே! ஆதிமூலமானவனே! தாய் போல அன்பு மிக்கவனே! பயத்தைப் போக்குபவனே! இகபர சுகத்தை அருள்பவனே! சேது பாலம் அமைத்தவனே! ஏழு மரா மரங்களைத் துளைத்தவனே! லட்சுமணரின் சகோதரனே! ஏகபத்தினி விரதனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.* காருண்ய மூர்த்தியே! ஜோதியாய் ஒளிர்பவனே! ஸ்ரீராமஜெயம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! கோதண்டம் என்னும் வில்லை ஏந்தியவனே! கோசலையின் புதல்வனே! ரத்ன குண்டலம் அணிந்தவனே! மரவுரி தரித்தவனே! சபரிக்கு மோட்சம் அளித்தவனே! எங்கள் உள்ளத்தில் குடியிருக்க வருவாயாக.* தசரதரின் வாக்கை காத்தவனே! சத்திய சீலனே! நேர்மை குணத்தவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் இருந்து காப்பவனே! விபீஷணனால் பூஜிக்கப்பட்டவனே! ராவணனை வதம் செய்தவனே! அயோத்தியின் மன்னவனே! சக்கரவர்த்தி திருமகனே! சுக்ரீவனுக்கு வாழ்வு அளித்தவனே! தியாகராஜரால் போற்றப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.* கல்யாண குணத்தவனே! ராஜலட்சணம் பொருந்தியவனே! வானரங்களின் தலைவனே! சங்கீதப் பிரியனே! ஜெகம் புகழும் புண்ணிய வரலாறு கொண்டவனே! மாருதியின் மனம் கவர்ந்தவனே! ரகுகுல திலகனே! லவகுசர்களின் அன்புத் தந்தையே! விஜய ராகவனே! சீதையின் நாயகனே! எங்கள் வீடும், நாடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.