திருநெல்வேலி: கொரோனா பரவலால் பாபநாசம், திருச்செந்துார் கோவில்களில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் உலகம்மை பாபநாசர் கோவில் முன்பாக தாமிரபரணி ஆற்றில் நீராட வெளியூர் மக்கள் வருகின்றனர். அங்கு நீராட கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆற்றின் படித்துறைகளில் இறங்க முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் கூட்டமாக குளிக்க ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்துார் முருகன் கோவில் முன்பு கடலில் நீராட நேற்று முன்தினம் தடைவிதித்து தடுப்புபலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாழிக்கிணற்றிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் தேங்காய் உடைத்தல், மூலவர் முன்பாக அமர்ந்து தரிசனம் உள்ளிட்ட நேர்த்தி கடன்கள் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணிந்து சென்று சுவாமி தரிசனம் மட்டுமே மேற்கொள்ளலாம். காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.