வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2021 04:04
மயிலாடுதுறை: மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் ஏப்.,29ல் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தையல் நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி நவக்கிரகங்களில் செவ்வாய் பகவான் சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்தரி சித்தர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்து உருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது அருள்வாக்கு இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வரும் 24 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 29ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா இரண்டாவது அலை பரவலைச் சுட்டிக்காட்டி, இந்த கும்பாபிஷேக விழாவுக்கு தடை விதிக்க கோரியும், கும்பாபிஷேகத்தை தள்ளிவைக்க கோரியும், தமிழ்நாடு திருக்கோவில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். கோவில் ஊழியர்கள் மூலமே கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என்றும், கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இதை ஏற்று கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் விதிகள் மீறப்பட்டால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். கும்பாபிஷேக நிகழ்வை கண்காணிக்க கண்காணிப்பாளர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.