பதிவு செய்த நாள்
21
ஏப்
2021
05:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமானுஜர் திருக்கோவிலில், ஸ்ரீ ராமானுஜரின், 1004 ம் ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமானுஜர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா, பத்து நாட்கள், உற்சவ விழாவாக நடக்கும். ஆனால், தற்போது கொரோனா தொற்று காரணமாக, பத்துநாள் விழா ரத்து செய்யப்பட்டு, ஒரு நாள் மட்டும் நடந்தது. விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு ஸ்ரீ ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர், பஜனை கோஷ்டியாருடன், சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர் அருகே உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று, எழுந்தருளினார். அங்கு பரிவட்ட மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், மீண்டும் தனது கோவிலுக்குள் எழுந்தருளினார். தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆச்சார்யார்களுக்கும், பாகவத கோஷ்டியாருக்கும் மரியாதை செலுத்தப்பட்டன. ராமானுஜர் கொடி இறக்கத்துடன், உற்சவம் நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.