பதிவு செய்த நாள்
21
ஏப்
2021
05:04
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சித்திரை மாத வசந்த உற்சவ விழா, நாளை துவங்குகிறது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில், வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வசந்த உற்சவம், நாளை துவங்கி, 26ம் தேதி நிறைவடைகிறது.விழா துவங்கும் நாளிலிருந்து தொடர்ந்து, ஐந்து நாட்கள், உற்சவ மூர்த்தியான கந்தசுவாமி பெருமாள், வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகாமையில் உள்ள, வசந்த மண்டபத்தில், மாலையில் எழுந்தருள்வார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறும். மீண்டும் இரவு, 7:30 மணிக்கு, சுவாமி, கோவிலை வந்தடைவார். இறுதி நாளில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.இவ்விழாவை முன்னிட்டு, வசந்த மண்டபத்தில் பந்தல் அமைத்தல், வளாக பகுதியை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பரவும் சூழல் உள்ளதால், இவ்விழாவில், பக்தர்களுக்கு அனுமதியில்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.