பதிவு செய்த நாள்
12
ஜூன்
2012
10:06
திருக்கோவிலூர் : அரகண்டநல்லூரில் புதியதாக கட்டப்பட்ட புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பழமையான புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு செல்வ வினாயகர், பால முருகன், நாகசக்தி கன்னி, நவக்கிரகங்களுடன் கூடிய புத்துமாரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 9ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. 10ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, புதிய சிலைகள் கிரிவலம், பிம்பஸ்தாபனம், மகா பூர்ணாஹூதி, மாலை 6 மணிக்கு மூன்றாம்கால யாகசாலை பூஜை, பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, மூலமந்திர பூஜை, ஜபஹோமம், தீபாராதனைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து கடம் புறப்பாடும். 6.30 மணிக்கு விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.