பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
11:04
பிரபு சங்கர்
ஒரே ஒருமுறை கண்களை மூடி, மனசுக்குள் ‘ராமா‘ என்று சொல்லிப் பாருங்கள். அப்படியே பரவசத்தில் ஆழ்வீர்கள். ராம நாமத்துக்கு அப்படி ஒரு மகிமை! அதனால் தான் பக்தர்கள் ‘ஸ்ரீராம ஜெயம்‘ என்றோ, ‘ராம, ராம, ராம‘ என்றோ தினமும் 108 முறை எழுதி வழிபடுவர்.
ராம நாமத்துக்கு ஏன் அத்தனை மகிமை?
ராமன் வாழ்வை அமைத்துக் கொண்ட விதம் அப்படி! ‘ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்‘ என கண்ணியம் மிகுந்த உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டியவர் ராமன்.
தந்தை சொல்லுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நற்பண்பை நாம் அவரிடம் கற்க வேண்டும். தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை என்றே அவன் கருதினான். தந்தையின் சொல், தன்னால் மதிப்பு இழந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். சாதி பாகுபாடு இன்றி வேடன் குகன் போன்ற எளியவர்களுடன் நட்பு கொண்டான். இன்னும் ஒருபடி அதிகமாக குகனைத் தன் சகோதரன் என பிரகடனம் செய்தான். கழுகு, குரங்கு, கரடி என எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டு மனித நேயத்தை வெளிப்படுத்தினான்.
அதனால்தான் பகைவரும் போற்றும் பெருமை பெற்றிருந்தான். சூழ்ச்சி வலையைப் பின்னி, தன்னைத் தந்திரமாக ராமன் வதைத்தான் என வாலி கோபித்தாலும், தான் வாழ்ந்த அதர்ம வாழ்வை அதே அதர்ம வழியில் முடித்து வைத்திருக்கிறான் என உணர்ந்து சமாதானம் ஆனான். தன் மரணத்துக்குக் காரணமான தம்பி சுக்ரீவனை இறக்கும் தறுவாயில் ராமனிடம் ஒப்படைத்து, ‘இவனைப் பார்த்துக் கொள். ஏதேனும் தவறு செய்தால் அறியாமை எனக் கருதி மன்னித்து விடு. ஆனால் தண்டிக்காதே’’ என வேண்டினான்.
அதாவது தன்னை வதைத்தவனிடமே, அதற்குக் காரணமான வாலியை ஒப்படைத்தான் வாலி. அப்படியென்றால் ராமனின் நேர்மை, நீதி தவறாமை, நடுநிலைமையை வாலி எப்படி போற்றியிருக்கிறான் என்பது புரிகிறது. இதற்கு காரணம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனஉறுதிதான்.
காட்டில் இருந்த காலத்தில் சீதை ஒருநாள், ‘அரக்கர்களை வதைக்கத் தான் வேண்டுமா? முனிவர்களுக்கு அவர்கள் தீங்கு செய்தாலும் அவர்களைக் கொல்வதால் உங்கள் மனம் ஈரமில்லாத பாறையாகி விடாதா?’ எனக் கேட்டாள்.
‘‘சீதா...உன்னைத் துறக்கவும் தயங்க மாட்டேன். தம்பி, லட்சுமணனை இழந்தாலும் வருந்த மாட்டேன். ஆனால் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போனால் அதன் பிறகு உயிர் வாழ மாட்டேன்’’என்றான் ராமன்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது ராமனின் இயல்பு. அது முனிவர்களுக்காக இருக்கட்டும், சுக்ரீவனுக்காக இருக்கட்டும், யாருக்கு வாக்களித்தாலும், அது தன்னால் நல்ல தீர்ப்பு வழங்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அவனது கொள்கை. அதனாலேயே அவன் போற்றுதலுக்குரியவன் ஆனான்.
ராமனின் பகைவன் ராவணன். அவன் சீதையை கடத்திக் கொண்டு சிறை வைத்தான். அவளது மனதை மாற்றி, தனக்கு உரியவளாக்க விரும்பினான். ராமனின் வீரத்தை கேள்விப்பட்டு தானும் அவனுக்கு நிகானவன் என்பதை மனைவி மண்டோதரியிடம் நிரூபிக்க முயன்றான்.
போர் புரிய இலங்கை அரண்மனையை நோக்கி ராமன் படைகளுடன் வந்த விஷயம் ராவணன் எதிர்பார்த்த ஒன்று தான். கடலைக் கடக்க மிதக்கும் கற்களால் பாலம் அமைக்கிறான் எனத் தகவல் கிடைத்தபோது ராவணன் குழம்பிப் போனான். எப்படி கற்கள் கடலில் மிதக்கும் எனக் கேட்டதற்கு கற்கள் ஒவ்வொன்றிலும் ‘ராம’ என்று எழுதியிருப்பதாகவும், அந்த மகிமையால் மிதப்பதாகவும் கேள்விப்பட்டு திகைத்துப் போனான்.
இதில் வேதனை என்னவெனில் தகவல் சொன்னது அவனது மனைவி மண்டோதரி! இப்போதே அவள் தோல்வியை எதிர்பார்த்து விடுவாளே என்பதற்காக, ‘ராவணன்‘ என எழுதி கல்லை நீருக்குள் இட்டான். அது மூழ்கியது. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக, அதை மீண்டும் நீரில் இட்டபோது அது மிதந்தது! அதிசயம் கண்டு மண்டோதரி வியந்தாள். ஆனால் அவளும் அறியாத ரகசியம் ஒன்றுண்டு. ராணவன் தன் பெயரை எழுதிய கல்லை நீரில் இட்டபோது, மனதிற்குள், ‘இந்தக் கல் மிதக்க வேண்டும், ராமன் மீது ஆணை‘ எனச் சொல்லிக் கொண்டான்! அதனால் கல்லும் மிதந்தது!
இப்படி பகைவனாலும் பாராட்டு பெற்றவன் ராமன்.
இது மட்டுமல்ல... சீதையைக் கவர பல உத்திகளைக் கையாண்டான் ராவணன். இறுதி முயற்சியாக மாயத்தால் ராமனாக உருமாறி சீதை முன் நின்றதுதான். அந்த மாய பிம்பம் கண்டு சீதை குழம்பினாலும் ராமனுடன் லட்சுமணன் வரவில்லையே எனச் சந்தேகம் கொண்டாள்.. ஓரிரு நொடிக்குள் மாய ராமன் அங்கிருந்து மறைந்தான்.
சீதை நிம்மதியடைந்த அதே நேரம், ராவணன் தன்னையே மனம் நொந்தான்: ‘என்ன கேவலம் இது! ராமனாக உருமாறியதும் அவனது நல்ல குணமே எனக்கும் வந்து விட்டதே! உருவம் ராமனாக மாறியதோடு உள்ளமும் ராமனாகி விட்டதே! சீதை என்னும் மாற்றான் மனைவியை ஏறெடுத்துப் பார்க்க கண்கள் மறுக்கிறதே! என்னே ராமனின் குணம்!‘
இது மட்டுமா...ஆயுதம் இழந்து நிராயுதபாணியாக நின்ற ராவணனைச் சுலபமாகக் கொல்லும் வாய்ப்பு கிடைத்தும் ராமன் ஏற்க மறுத்தான். ‘இன்று போய் மறுநாள் வா’ என அனுப்பி வைத்தான். இக்கட்டான நிலையில் ராவணன் மனம் திருந்தி, சீதையைத் ஒப்படைக்கலாம் என எதிர்பார்த்தான் ராமன். ஆனாலும் அவன் திருந்தவில்லை.
இத்தகைய ராமனின் கதை மாணவர்களின் மத்தியில் நல்லொழுக்கத்தை உண்டாக பாடமாக வைக்கும் தகுதி பெற்றது. ‘‘வென்றிசேர் இலங்கையானை வென்ற மால்வீரன் ஓத
நின்ற ராமாயணத்தின் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும், உரைத்திடக் கேட்டோர் தாமும்,
நன்று இது என்றோர் தாமும் நரகமது எய்திடாரே‘‘ என்கிறார் கம்பர்.
மாவீரன் ராமனின் வாழ்க்கை வரலாறை படித்தாலும் சரி, சொல்லக் கேட்டாலும் சரி, ‘அடடா... ராமாயணக் கதையால் எத்தனை நன்மை’ என வியந்தாலும் சரி அவர்கள் அனைவரும் நரகம் என்னும் துன்பத்தை அனுபவிக்க மாட்டார்கள். மறுமை மட்டுமின்றி இம்மையிலேயே சொர்க்க வாழ்வு பெறுவர்.