மானாமதுரை; மானாமதுரை சித்திரை விழாவில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி நடந்தது.
மானாமதுரை ஆனந்தவல்லி- சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இந்தாண்டு உள் திருவிழாவாக நடைபெற்றதால் விழா நாட்களின் போது அம்மனும், சுவாமியும் கோயிலுக்குள் வீதி உலா வந்தனர்.பக்தர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றிதரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக நேற்று காலை அம்மனும், சுவாமியும் உள் பிரகாரத்திலேயே வலம் வந்து ஊஞ்சல் ஆடி அம்மன் சன்னதி முன் அமைக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர்.தொடர்ந்து சிவாச்சாரியார்கள் சக்கரை, ராஜேஷ், பரத்வாஜ் உள்ளிட்ட பலர் ஹோமங்கள் வளர்த்து சிறப்பு பூஜைகளை நடத்திய பின்னர் சுவாமிகள் மாலை மாற்றி கொண்ட பின் திருக்கல்யாணம் நடந்தது.