அழகர் வீற்றிருக்கும் மலை என்பதால் ‘அழகர்மலை’ என்று சொன்னாலும் தலவரலாற்றில் வேறு பெயர்களும் உள்ளன. திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்ரி, இடபகிரி என்பனவாகும். நாலாபுறமும் மலை பரவிக் கிடந்தாலும் பெருமாள் மலையின் தெற்கில் கோயில் கொண்டிருக்கிறார். இத்தலம் மிகவும் பழமை மிக்கது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றாலும் சிறப்பு மிக்கது. வராக, பிரம்மாண்ட, வாமன, ஆக்நேய புராணங்களில் இதன் பெருமையும், பழமையும் கூறப்பட்டுள்ளது. இக்கோயிலின் தல புராணம் ‘விருஷபாத்ரி மகாத்மியம்’ என்னும் பெயரில் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டுள்ளது.