உக்கம்பெரும்பாக்கத்தில் உலக நன்மைக்காக 108 கோபூஜை
பதிவு செய்த நாள்
18
ஜன 2026 12:01
உக்கம்பெரும்பாக்கம்: காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமம், கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், உலக நன்மைக்காகவும், இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெற வேண்டி, காணும் பொங்கலுக்கு மகாலட்சுமி பூஜை எனப்படும் 108 கோபூஜை நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று, காலை 7:30 மணிக்கு மேல் நட்சத்திர விருட்ச விநாயகர், அத்தி லிங்கம், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வரர், விருட்ச நாகாத்தம்மன் ஆகிய தெய்வ திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும், அம்பிகை சமேத சிவபெருமான் ரிஷப வாகனத்திலும் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். காலை 11:00 மணிக்கு மேல் 108 பசுக்கள் மற்றும் கன்றுகளை இடம்பெற செய்து மகாலட்சுமி பூஜை எனப்படும் 108 கோ பூஜை விழாவும், மஹா தீப ஆராதனையும், அன்னதானமும், மாலை 4:00 மணிக்கு சிவனின் அம்சமான அரச மரத்திற்கும், பார்வதியின் அம்சமான வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தன.
|