உத்திரமேரூர்: மஹா சிவராத்திரியையொட்டி, சென்னை மாதவரத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரிக்கு செல்லும் 63 நாயன்மார்களுடன் ஒரு ரதம், ஆதியோகி சிலையுடன் ஒரு ரதம் என, இரு ரதங்களும் நேற்று உத்திரமேரூர் வீதிகளில் யாத்திரையாக சென்றது.
கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி வரும் பிப்., 15ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தென் கைலாய பக்தி பேரவை சார்பில், ‘சிவனோடு ஒரு பயணம்’ என்ற சிவ யாத்திரை சென்னை மாதவரத்தில் இருந்து 63 நாயன்மார்களுடன் ஒரு ரதம், ஆதியோகி சிவனுடன் ஒரு ரதம் என, இரு ரதங்கள் கடந்த 15ம் தேதி புறப்பட்டது.
இரு ரதங்களும், ஏழு மாவட்டங்களில், 54 ஊர்களை கடந்து கோவை வெள்ளியங்கிரிக்கு பிப்., 13ல் செல்கிறது. யாத்திரையாக செல்லும் வழியில், இரு ரதங்களும் நேற்று உத்திமேரூருக்கு வந்தது. பக்தர்கள் சார்பில், இரு ரதங்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து உத்திரமேரூரில் உள்ள பல்வேறு வீதி வழியாக இரு ரதங்களும் யாத்திரை சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.