ஆல்கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் கால்நடை வளம் பெருக வழிபாடு
பதிவு செய்த நாள்
18
ஜன 2026 12:01
உடுமலை: உடுமலை அருகே, சோமவாரபட்டி ஆல்கொண்டமால் கோவில், திருவிழாவை முன்னிட்டு நாள் முழுவதும் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், கால்நடைகளை காக்கும் தெய்வமான ஆல்கொண்டமால் கோவில் உள்ளது.இங்கு எழுந்தருளியுள்ள சுவாமியை வழிபட்டால், கால்நடைகள் நோய், நொடியின்றி ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. இக்கோவிலில், தைப்பொங்கலை முன்னிட்டு, மூன்று நாட்கள் நடக்கும் பிரசித்தி பெற்ற தமிழர் திருநாள் திருவிழா நேற்று முன்தினம், சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. நேற்று அதிகாலை முதலே, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பாரம்பரிய முறைப்படி, மாட்டு வண்டி, ரேக்ளா மற்றும் வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்தனர். பசும் பாலை கொண்டு வந்து, பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த குழாய் வழியாக, நேரடியாக ஊற்றி, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். நாள் முழுவதும் இடைவிடாது ஆல்கொண்டமாலுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தை முதல் நாள் மாடுகள் ஈன்றெடுக்கும், கன்றுகள் ஆல்கொண்டமாலுக்கு உரியவை, என்பதால், ஏராளமான கன்றுகள், ஆடுகளை கொண்டு வந்து காணிக்கையாக வழங்கினர். திருவிழாவை முன்னிட்டு, கோவில் முன் மண்டபம், சுற்று பிரகாரம் முழுவதும், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல ஏக்கர் பரப்பளவில் திருவிழா கடைகள், பிரமாண்ட ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுடன் திருவிழா களைகட்டியது.
|