காஞ்சி ஏகாம்பரநாதருக்கு மஹா அபிஷேகம்
பதிவு செய்த நாள்
18
ஜன 2026 12:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், காணும் பொங்கலையொட்டி, உற்சவருக்கு நேற்று, மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று, திம்மசமுத்திரம் பார்வேட்டை உத்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். உத்சவத்தின்போது, ஏலவார் குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர், காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக செல்வார். அங்கு ஏகாம்பரநாதருக்கு மஹா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த மாதம் 8ம் தேதி நடந்த கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, தற்போது மண்டலாபிஷேகம் நடைபெறுவதால், நடப்பாண்டு காணும் பொங்கலான நேற்று, பார்வேட்டை உத்சவதிற்கு ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரம் செல்லவில்லை. இருப்பினும், காணும் பொங்கலையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள உற்சவருக்கு நேற்று, பல்வேறு வாசனை திரவியங்கள், பால், தயிர், கரும்புச்சாறு, இளநீர், பழங்கள், தேன், சந்தனம், திருநீறு, பன்னீர் உள்ளிட்டவைகளால் மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஏலவார்குழலி அம்பிகையுடன், உற்சவர் ஏகாம்பரநாதர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
|