கும்பமேளா 55 நாட்கள் நடைபெறும்: உ.பி., முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2012 10:06
லக்னோ: "ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சி 44 நாட்களுக்குப் பதிலாக, இவ்வாண்டு 55 நாட்கள் நடைபெறும். இதன் மூலம் கடந்தாண்டை விட இவ்வாண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் உயரும் என, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் கும்பமேளா நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான இந்துக்கள் கலந்து கொள்வது வழக்கம். இவ்வாண்டுக்கான இந்த நிகழ்ச்சி குறித்து நேற்று லக்னோவில் முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பின் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: இவ்வாண்டுக்கான கும்பமேளா நிகழ்ச்சிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி துவங்கும். நிகழ்ச்சி நடைபெறும் அலகாபாத்தில், நதி நீரை மாசுபடச் செய்யும் தொழிற்சாலைகளை கும்பமேளா நிகழ்ச்சி நடக்கும் நாட்களில் மூடப்படுவதற்கு உத்தரவிடப்படும். பக்தர்கள் நீராட வசதியாக, நதியில் வெள்ளம் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கும்பமேளாவுக்காக 333 திட்டங்கள் நிறைவேற்றப்படும். அதில் 162 பணிகள், நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் செயல்படுத்தப்படும். நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்ற சரியான புள்ளி விவரங்கள், செயற்கைக் கோள் மூலமாக பெறப்பட்டு அதற்கேற்ப பக்தர்களின் வசதிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதிகளவு மின்சாரம் தேவைப்படுவதால் எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, 4ஜி இணைய தள வசதியும், தகவல் மையங்களும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.