நாயகத்தின் மகள் ஜைனபிடமிருந்து அவசரச் செய்தி ஒன்று வந்தது. ஜைனபின் மகள் இறக்கும் நிலையில் இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்றும் ஆள் அனுப்பியிருந்தார். “ஜைனபுக்கு என் ஸலாம் சொல்லுங்கள். உயிரைக் கொடுக்கும், எடுக்கும் உரிமை இறைவனுக்கு உரியது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை உண்டு. பொறுமையை கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்லுங்கள்” என வந்தவரிடம் அவர் தெரிவித்தார். மகள் உயிர் பிரியும் போது தாத்தா அருகில் இருக்க வேண்டும் என மகள் விரும்புகிறார். இக்கட்டான நிலையிலும் பொறுமையை பின்பற்றி கைக்கொண்டு நன்மையை எதிர்பார்க்குமாறும் அறிவுரையும் அனுப்பினார். இந்த விஷயம் ஜைனபிடம் தெரிவிக்கப்பட்டது. “ இல்லை.. இல்லை.. நாயகத்தை உடனடியாக வரவழையுங்கள். இறைவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். அவர் வந்து என் மகளைப் பார்க்க வேண்டும்” என்கிறார். மீண்டும் ஆள் அனுப்பினார். உடனே மகள் வீட்டிற்கு புறப்பட்டார். மூச்சுத் திணறலால் அவதிப்படும் பேத்தியைக் கண்டதும் அழுகை வந்தது. அருகில் நின்ற தோழர்கள், ‘‘ஏன் அழுகிறீர்கள்?” எனக் கேட்டனர். “இறைவன் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்தும் இரக்க உணர்வே கண்ணீர். இரக்கம் கொள்பவர்களின் மீது இறைவனும் இரக்கம் கொள்வான்” என்றார்.