ஜார்ஜ் ஸ்டீபன்சன் என்றதும் நினைவுக்கு வருவது அவர் கண்டுபிடித்த புகைவண்டி தான். அதற்கு பின்னால் கண்ணீர் அனுபவங்கள் பல உண்டு. வறுமையில் வாடியதால் ஸ்டீபன்சனை பெற்றோர் பள்ளியில் சேர்க்கவில்லை. பகலில் ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு இரவுநேரப் பள்ளியில் தான் படித்தார். அறிவியல் பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். செருப்பு தைக்க கற்ற அவர், அதில் கிடைத்த வருமானத்தில் சுயதேவையை நிறைவேற்றினார். நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். அங்கு பழுதடைந்த இயந்திரம் ஒன்றை சரிசெய்ய முயன்ற பலரும் தோல்வியடைந்தனர். கடைநிலை ஊழியராக கருதப்பட்ட ஸ்டீபன்சன் இறுதியாக முயற்சித்தார். யாருடைய உதவியும் இல்லாமல் பழுது நீக்கி அதை இயக்கினார். அதைக் கண்டு அனைவரும் வியந்தனர். அதிகாரிகள் பாராட்டியதோடு பெருந்தொகையைப் பரிசாகக் கொடுத்தனர். அதை மூலதனமாகக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். உண்மை, நேர்மை, உழைப்பு என லட்சியத்துடன் பாடுபட்ட ஸ்டீபன்சன் புகைவண்டி எஞ்சினைக் கண்டுபிடித்தார். உண்மை, நேர்மை, உழைப்பு கொண்ட மனிதர்களை ஆண்டவர் ஒருபோதும் கைவிடுவதில்லை.