பதிவு செய்த நாள்
25
மே
2021
08:05
முருகப்பெருமான் அவதரித்த திருநாள் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் இவர். முருகனின் பிறந்த நாளான இன்று அவன் மனம் குளிர குடம்குடமாக பால் எடுத்து வந்து அபிேஷகம் செய்து வழிபடுவது பக்தர்கள் வழக்கம். சூரபத்மனான எதிரிக்கும் கூட நற்கதி வழங்கும் அற்புதமான கை அவருடையது. அதனால் தான் முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவர் முருகன் என்று அருணகிரிநாதர் போற்றுகிறார்.
எங்கும் சிவனைக் காணலாம்: மாங்கனிக்காக நடந்த போட்டியில் முருகன் உலகை வலம் வந்தார். விநாயகரோ பெற்றோரை வலம் வந்து எளிதாக கனியை வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இதன்பின் கனி கிடைக்காததால் முருகன் கோபித்துக் கொண்டு பழநி மலையில் ஆண்டிக்கோலத்தில் நின்றார். ஆனால் இதில் ஆழமான தத்துவம் உள்ளது. சிவம் என்னும் பரம்பொருளில் உலகிலுள்ள எல்லாவற்றையும் கண்டார் விநாயகர். உலகமே அவருக்குள் அடக்கம் என்று அவரது பார்வை. உலகம் எங்கும் சிவம் நிறைந்திருக்கிறது. எனவே உலகையே சுற்ற வேண்டும் என்பது முருகனின் பார்வை. எங்கும் சிவமயம் அதாவது எங்கும் சிவனைக் காணலாம் என்கிறார் முருகன். சிவனுக்குள் எல்லாம் அடக்கம் என சிவபெருமானுக்குள் உலகைக் கண்டார் விநாயகர். இந்த தத்துவத்தை உணர்த்தவே இருவரும் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினர். பாலும், சுவையும் போல விநாயகர், முருகனை பிரிக்க முடியாது. இதை உணர்ந்தவர்கள் ஞானக்கனியாகத் திகழ்வர் என்பதையே முருகனின் உலக உலா உணர்த்துகிறது.
வேலின் தத்துவம்: ஓம் மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் அடைத்தார் முருகன். பின்னர் தானே படைப்புத்தொழிலைத் தொடங்கினார். காக்கும் தொழிலையும், அழிக்கும் தொழிலையும் கூட அவரே மேற்கொண்டார். அவரால் படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் பாவச் செயலில் ஈடுபடாமல் வாழ்ந்ததால் அவர்களைக் கண்டு எமனும் கூட பயந்தான். இதனால் தான் மரணத்தின் பிடியில் உள்ளவர்கள் கூட முருகனைச் சரணடைகிறார்கள். குறிப்பாக திருச்செந்துார் முருகனின் பன்னீர் இலை விபூதியும், ஆதிசங்கரர் பாடிய சுப்பிரமணிய புஜங்கம் ஸ்தோத்திரமும் நோய் தீர்க்கும் மகிமை கொண்டவை. இன்னும் எளிமையாக,
“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே!
செந்தில் நகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே வினை”
என்ற பாடலை பாடினால் நோயற்ற வாழ்வும், வாழ்வின் முடிவில் முக்தியும் கிடைக்கும்.
முருகனின் கையிலுள்ள வேல் மேற்பகுதியில் கூர்மையாகவும், நடுவில் பரந்தும், நீண்ட
கைப்பிடி கொண்டதாகவும் இருக்கும்.
அதைப் போல கூர்மையான அறிவும், பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக மனிதன்
வாழ வேண்டும் என்பதே வேலின் தத்துவம்.
வைகாசி விசாக நன்னாளில் அனைவருக்கும் முருகனருள் கிடைக்க பிரார்த்திப்போம்.
முயற்சிகள் வெற்றி பெற...: முருகனின் வலதுபுறம் வள்ளியும்,இடது புறம் தெய்வானையும் நின்ற கோலத்தில் இருப்பர். இவர்களில் வள்ளி கையில் தாமரையும், தெய்வானை கையில் நீலோற்பலம் என்னும் மலரும் இருக்கும். சிவபெருமானைப் போல முருகனுக்கும் மூன்று கண்கள் உண்டு. அவை சூரியன், அக்னி, சந்திரன். இக்கண்கள் எப்போதும் மூடுவதில்லை. அவரது சூரியக்கண், வள்ளியின் கையிலுள்ள தாமரையைப் பார்ப்பதால், அது எப்போதும் மலர்ந்திருக்கும். சந்திரக்கண் தெய்வானையின் கையிலுள்ள நீலோற்பலத்தைப் பார்ப்பதால் அதுவும் மலர்ந்திருக்கும். இந்த பூக்களைப் போல, முருகனை வழிபடுவோரின் வாழ்வு எப்போதும் மலர்ந்திருக்கும். அவர்களின் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும். இதுவே வள்ளி, தெய்வானை ஏந்தியுள்ள மலரின் வெற்றித் தத்துவம்.