ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே திருக்கோயில் பசு காப்பகத்தில் தீவனம் பற்றாக்குறையால், மாடுகள் தவிக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான பசு காப்பகம் பாம்பன் குந்துகாலில் உள்ளது. இங்குள்ள 40க்கு மேலான பசு மாடுகள், கன்று குட்டிகளுக்கு வைக்கோல், புண்ணாக்கு, தவிடு ஆகிய தீவனங்களை கோயில் ஊழியர்கள் வழங்கி பராமரிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தவுடு தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டு, மாடுகளுக்கு சத்தான உணவு கிடைக்காமல் மெலிந்து காணப்படுகிறது. மேலும் பசு காப்பகத்தில் மாடு சிறுநீர் தேங்கி கிடப்பதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தரைதளத்தை அகற்றி புதுப்பித்து, பராமரிப்பு இல்லாத வேலியால் பிற மாடுகள் பசு காப்பகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேலியை சீரமைக்க இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.