தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய் , ஞாயிறு கிழமைகளில் இரு மடங்கு பக்தர்கள் வருவார்கள், ஆடி வெள்ளி போன்ற விசேச தினங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும், கோயிலில் அம்மனுக்கு நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபடுவார்கள், இதுதவிர அம்மனுக்கு தேங்காய், பழம், எலுமிச்சை மாலை அணிவித்தும் வேண்டுவார்கள், கோயிலின் கிழக்கு நுழைவு வாயில் வழியாகத் தான் பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்வார்கள், காதணி விழா, கிடா வெட்டு உள்ளிட்டவற்றிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள், கோயிலின் கிழக்கு நுழைவு வாயில் அருகே கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்ட பின் அப்படியே கோயிலினுள் வருவார்கள். நுழைவு வாயிலை மறித்து டேபிள் அமைத்து நெய் விளக்குகளை பரப்பி விற்பனை செய்கின்றனர். ஒருவர் மட்டுமே வந்து செல்லும் அளவிற்கே பாதை உள்ளது. இதனால் கூட்ட நெரிசலில் பக்தர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
கூட்ட நெரிசலில் விளக்குகள் மீது கை பட்டு தவறி விழுந்தாலும் பக்தர்களை அவதூறாக பேசுகின்றனர். கோயிலில் நெய் விளக்கில் தீபம் ஏற்றிய பின் விளக்குகள் எடுத்து வந்து மீண்டும் விற்பனை செய்கின்றனர். பலமுறை பாதையை மறித்து விளக்குகள் விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மடப்புரம் கோயிலில் பாதையை மறித்து நெய் தீபம் விற்பனை செய்பவர்களை அப்புறப்படுத்தி பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.