பதிவு செய்த நாள்
28
மே
2021
07:05
அருப்புக்கோட்டை: வீரமரணமடைந்த வீரனின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றும் வகையில் நடுகல் எழுப்பி வழிபாடு செய்யும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தது. மக்கள் நலனுக்காக செயல்பட்டவர்கள் என்பதற்குச் சான்றாக, கிணறு வெட்டுதல், நீரோடை பராமரித்தல், சத்திரம் ஏற்படுத்துதல், கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற நலப் பணிகளை தொடரும் போது, எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்பட்டால், அவர்களுடைய சேவையை போற்றும் வகையில் உருவச்சிலைகள் நிறுவப்பட்டது.
இச்சிலைகள் நினைவுகள் என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் அருகில் நாகம்பட்டி வீரம்மாள் கோவிலில் நாயக்கர் கால நினைவு கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 13 சென்டிமீட்டர் உயரமும், 73 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. அதில் உள்ள ஆணின் உருவம் கைகளை கூப்பிய நிலையில், தலையில் தலைப்பாகை அணிந்தும், காதில், கழுத்தில் அணிகலன்கள் அணிந்தும், கால்கள் வரை பட்டையானது புனைந்தும், கால்களில் வீரக்கழல் சூடிய அமைப்பில் அமைந்துள்ளது. வலது மற்றும் இடது பக்கத்தில் வணங்கிய நிலையில், இரு பெண்களின் தலை முடியானது அள்ளி முடிய போட்டு இருவருக்கும் இடது பக்கத்தில் கொண்டை போடப்பட்டுள்ளது. இரு பெண்களின் கழுத்தில் கண்டிகை, சரப்பளி, சவுடி போன்ற ஆபரணங்கள் அணி செய்யப்பட்டு, இரு புஜங்களில் தோல் வளையம் அணிந்தும் கால்களில் மடந்தை எனப்படும் சிலம்பினை அணிந்தவாறும், பெண்களின் இடுப்பு முதல் கால்கள் வரை பட்டாடை அணிந்த நிலையில் உள்ளது. இந்தச் சிற்பங்களின் மேலே கூடு என்ற கட்டடக்கலை கூறு காட்டப்பட்டுள்ளது. இந்த நினைவு கல்லை பற்றி அந்த ஊர் மக்களின் கருத்துப்படி, கோவில் திருப்பணி மேற்கொள்ளும்போது துர் மரணம் அடைந்ததால், அந்த நினைவு கல் வைக்கப்பட்டு இருக்கலாம் என அறிய முடிகிறது. பெரிய நீரோடை அருகில் அமைந்திருப்பதால், குடிமராமத்து பணி மேற்கொள்ளும் போது ஏதேனும் துர் மரணம் நிகழ்ந்தது நினைவாக இந்த நினைவு கல் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அந்த பகுதியில் வாழ்கின்ற தெலுங்கு மொழி பேசும் மக்கள் தங்கள் குலதெய்வமாக எண்ணி வழிபாடு செய்து வருகின்றனர். என்று அருப்புக்கோட்டை எஸ் பி கே கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் விஜயராகவன் கூறுகிறார்.