பதிவு செய்த நாள்
31
மே
2021
04:05
சென்னை: கோவில் சொத்துக்கள் தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
சார் - பதிவாளர்களிடம், கோவில் தக்கார் மற்றும் செயலர் அலுவலர்கள் விற்பனை தடை மனுக்களை அளிக்க வேண்டும் என, அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமான அளவில் உள்ளன. இந்த நிலங்களை, தனியார் சிலர், போலி பத்திரங்கள் வாயிலாக அபகரிக்கும் செயல்கள் அவ்வப்போது நடக்கின்றன. பல இடங்களில், கோவில் சொத்துக்களுக்கு முறையான முன் ஆவணங்கள், பட்டா போன்றவை பராமரிக்கப்படுவதில்லை.
இவை, சொத்து அபகரிப்பில் ஈடுபடுவோருக்கு சாதகமாகி விடுகிறது.இதைத் தடுக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சார் - பதிவாளர்களிடம், கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர்கள் விற்பனை தடை மனுக்களை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அப்படி தடை மனு அளிக்கும் போது, அது முறையானதாக இருந்தால், அந்த விபரம் வில்லங்க சான்றிதழில் சேர்க்கப்படும். இதனால், கோவில் சொத்துக்களை, ஆள்மாறாட்டம் வாயிலாக மோசடி கும்பல்கள் பத்திரப்பதிவு செய்வது தடுக்கப்படும்.
இது தொடர்பாக, அமைச்சரின் அறிவுறுத்தலில், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவு:கோவில் சொத்துக்களை நிர்வகித்து வரும் அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள், அந்தந்த பகுதி சார் - பதிவாளரிடம், உரிய தடை மனுக்களை உடனடியாக அளிக்க வேண்டும். கிராமப்பகுதி நிலம் எனில், மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு, வகைபாடு விபரங்களை குறிப்பிட்டு தடை மனு அளிக்க வேண்டும்.நகர்ப்புற நிலம் எனில், வார்டு எண், பிளாக் எண், நகர சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள் அடிப்படையில் தடை மனு அளிக்க வேண்டும்.
இதனால், மோசடி நபர்கள், கோவில் சொத்துக்கள் தொடர்பாக போலி பத்திரங்களை தாக்கல் செய்தால், சார் - பதிவாளர்களால் அவை நிராகரிக்க வாய்ப்பு ஏற்படும்.பதிவுத் துறையின், ஆன்லைன் பத்திரப்பதிவு சாப்ட்வேரில், தமிழ் நிலம் என்ற வருவாய் துறை சாப்ட்வேர் இணைக்கப்பட்டு உள்ளதால், இது சாத்தியமாகும்.இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள, அறங்காவலர்கள், செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முயற்சி, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வழி வகை செய்யும் என, ஆன்மிக அன்பர்கள் தெரிவித்துள்ளனர்.