பதிவு செய்த நாள்
31
மே
2021
06:05
சென்னை: கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு, உதவித்தொகையாக, 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ், 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு, நிலையான சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை. கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோவில்களில் பக்தர்கள் வருகை இல்லை. போதிய வருமானமின்றி, அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் எல்லாம், அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்த முதல்வர், கோவில்களில் மாத சம்பளம் பெறாமல் பணியாற்றும், ஒவ்வொரு கோவில் ஊழியருக்கும், 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த உதவித்தொகை மற்றும் பொருட்கள், கோவில் பணியாளர் அல்லாத, கோவில் வழியே உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும். இவ்வாறு, சேகர்பாபு தெரிவித்துள்ளார்.