தோதாபுரி என்னும் துறவியிடம் சீடராக இருந்தார் ராமகிருஷ்ணர். தடித்த போர்வை, நீண்ட இடுக்கி, பித்தளைச் செம்பு, உட்கார தோலால் ஆன ஆசனம் இவையே குருநாதரின் உடைமைகள். எப்போதும் தியானத்தில் ஈடுபடும் தோதாபுரியிடம், ‘‘குருவே! பூரணஞானம் அடைந்த பின்னும் நீங்கள் ஏன் தியானம் செய்ய வேண்டும்?’’ எனக் கேட்டார் ராமகிருஷ்ணர். தன்னிடம் இருந்த செம்பைக் காட்டி, ‘‘இது எவ்வளவு பளபளப்பாக இருக்கிறது. ஆனால் தினம் தேய்க்காவிட்டால் கறுக்கும். நம் மனமும் அப்படியே. தியானத்தால் அதை சுத்தமாக்குகிறேன்’’ என்றார். ‘‘அதுவே தங்கச்செம்பாக இருந்தால் கறுக்காது தானே?’’ என்றார் ராமகிருஷ்ணர். ‘‘ சரிதான்! ஆனால் உன் போல அனைவருக்கும் தங்கமனசு இருக்காதே’’ என்றார் தோதாபுரி.