பதிவு செய்த நாள்
16
ஜூன்
2012
03:06
26 வது படலத்தில் சதாபிஷேக விதி கூறப்படுகிறது. முதலில் ஆயிரம் சந்தினை கண்ட தீஷிதர்களுக்கு அகால மரணத்தை போக்குவதும், ஆயுள் ஆரோக்யம், இவைகளை விருத்தி செய்வதும், புத்திரன், பேரன், தனம், பயிர்செழிப்பு இவைகளை அதிகரிக்கச் செய்வதுமான சதாபிஷேகம் பற்றி கூறுகிறேன் என்பது கட்டளை உத்தராயண காலத்தில் சுக்லபக்ஷத்தில் நல்ல திதி கிழமை லக்னம் இவைகளுடன் கூடிய நல்ல தினத்தில் அபிஷேகம் செய்யவேண்டும் என காலம் அறிவிக்கப்படுகிறது. பிறகு மண்டபத்திலோ பந்தலிலோ, கொட்டகையிலோ, சுத்தமான தேசத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும் என கூறி, மண்டம் முதலியவைகளை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிராமணன் முதலிய நான்கு ஜாதியில் பிறந்தவர்களும் கீழ் ஜாதியில் பிறந்தவர்களும் அந்தந்த ஜாதியில் உண்டான ஸ்திரிகளும் விசேஷமாக சக்ரவர்த்திகள் மந்திரிகள், அரசர்கள், அமைச்சர்கள், ராஜ புரோகிதர்கள், ஆகிய இவர்களின் ஸ்திரிகளும் சதாபிஷேகம் செய்ய யோக்யமானவர்கள் ஆவார்கள் என கூறப்படுகிறது. எல்லா லக்ஷணத்துடன் கூடியவரும் பஞ்சாங்க பூஷணத்துடன் கூடியவருமான சிவ திவிஜனான ஆசார்யன் அபிஷேகம் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. அபிஷேக தினத்திற்கு முன்தினம் ராத்திரியில் எஜமானனுக்கும் அவர் மனைவிக்கும் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அதில் சக்கரவர்த்தி விஷயத்தில் முக்யமான மனைவிகள் பலபேர் இருந்தால் அவர்களுக்கும் ரக்ஷõ பந்தனம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அந்த முன்தின ராத்திரியில் பால் குடித்து கம்பளம் முதலியவைகளால் செய்யப்பட்ட படுக்கையில் யஜமானன், தனியாக தெற்கு பாகத்தில் தலைவைத்துக் கொண்டு தூங்கவும் என கூறப்படுகிறது.
நன்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில் நூல் பிடித்து அளவு செய்யும் முறையாக மண்டலம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு மண்டல மத்தியில் கும்பத்தை வைப்பதற்கு ஸ்தண்டிலம் அமைக்கும் முறையும் சிவ கும்பம் வர்த்தனி மற்ற கலசங்களின் அளவு பற்றியும் அந்த கும்பங்களில் நூல் சுற்றும் முறை ஆகிய பல விஷயங்கள் கூறப்படுகின்றன. சிவ கும்பம் முதலிய கும்பத்தில் நதி முதலியவைகளின் ஜலத்தால் நிரப்புவது உயர்ந்ததாகும் என கூறி அந்த கும்ப தீர்த்தத்தில் சேர்க்க வேண்டிய வாசனை திரவ்யங்கள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு 108 கலச ஸ்தாபன முறையும் தேவதைகளை பூஜிக்கும் முறையும் திரவ்யங்களை சேர்க்கும் முறையும் கும்ப பூஜையும் அதன் மத்தியில் உள்ள கும்பத்தில் ஸர்வாங்க பூஷிதமான சிவனையும் வர்த்தனியில் மனோன்மணியையும் பூஜிக்கவும் யஜமானன் பல மனைவிகளுடன் இருந்தால் பல வர்தனிகள் ஸ்தாபிக்கவும் அந்த எல்லா கும்பங்களிலும் மனோமணியையே பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 108 கலசங்களின் பூஜை விஷயத்தில் ருத்திரர்களின் பெயர்களைக் கூறி பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஆனால் முதல் ஆவரணத்தில் மட்டும் அஷ்டவித்யேஸ்வரர்களை பூஜிக்கவும் என தனியாக கூறப்படுகிறது. பிறகு யஜமானன் தீட்சிதனாக இருந்தால், தீட்சை செய்யவேண்டாம் என கூறப்படுகிறது. தீட்சை செய்யப்படவில்லை என்றால் அந்த அபிஷேக காலத்தில் தீட்சை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் செய்யவேண்டிய ஹோம முறையும் நிரூபிக்கப்படுகிறது. ஹோமம் முடிவில் மேற்படி இவ்வாறு முறையாக ஹோமம் செய்து மீதம் உள்ள ராத்திரி பொழுதை கழித்து உத்தமமான ஆசார்யன் தீட்சை செய்யப்படாதவர்களின் விஷயத்தில் பிரதானமான அக்னியால் தீட்சை செய்ய வேண்டும் என கூறி தீட்சை முறையும் முறை கூறப்படுகிறது.
பிறகு சிவ பஞ்சாக்ஷரத்தினாலேயே தீட்சை செய்ய வேண்டும் என அறிவிக்கிறார். பிறகு எஜமானனின் அபிஷேக முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு அரசர்களின் அபிஷேகத்தில் தங்கம், வெள்ளி, முதலிய உலோகத்தினால் செய்யப்பட்ட சஹஸ்ர தாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும் மற்ற எல்லா புருஷர்களுக்கும் சததாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அபிஷேகத்திற்கு பிறகு செய்ய வேண்டிய முறை கூறப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்டவரை மனைவியுடன் கூட எல்லா அலங்காரமும் கூட பத்திராசனத்தில் அமர்த்தி தான்யங்கள் மது பாத்திரம் கன்றுடன் கூடி பசு அவைகளை தரிசனம் காண்பிக்கவும் பிறகு பந்துக்களால் பூஜிக்கப்பட்டவரும் சந்தோஷம் அடைந்தவரும் பாட்டு வாத்யத்துடன் கூடியவருமான அரசனை பல்லக்கில் ஏற்றி கிராம பிரதட்சிணம் செய்து வீட்டின் வாசலில் பலகையின் மேல் அமர்த்தி அவனுடைய பாதங்களை பாலாலும் ஜலத்தாலும் அலம்பி, மஞ்சள் நீர் விடுவதன் மூலமும் தீபத்துடன் கூடிய பெண்களால் மூன்று பிரதட்சிணம் செய்வித்து, பாதுகை போட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டை அடையவும் என்பதான கிரியாவிசேஷங்கள் சதா அபிஷேக விதியில் விவரிக்கப்பட்டுள்ளன. பிறகு அபிஷேக விஷயத்தில் 108 கலசத்தை ஸ்தாபனம் செய்து முறைப்படி செய்யவும் இந்த அபிஷேக முறை உத்தமமாகும். 49 கலசம் அல்லது 25 கலசம் 9 கலசம் 5 கலசம் 1 கலசம் முதலிய எண்ணிக்கை உள்ள கலசங்களால் அபிஷேகம் செய்வது வெவ்வேறு விதமாக கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்கள் ஜபம் செய்தவர்கள் ஸ்தோத்திரம் செய்தவர்கள் பக்தர்கள் ஆகியவர்களுக்கு தட்சிணை கொடுக்கும் முறை கூறப்படுகிறது. சதா அபிஷேக பயன்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறாக 26வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. ஹே அந்தணர்களே! எதிர்பாராத ஆபத்துக்களை நீக்கவல்லதும் ஆயுள் ஆரோக்யத்தை அதிகமாக தரக்கூடியதுமான சதாபிஷேகத்தை சுருக்கமாக கூறுகிறேன்.
2. தனம் பயிர்களின் வளர்ச்சி புத்திரன் முதலிய ஸந்ததிகளை பெருக்குவது அபிஷேகத்தின் பயனாகும். அபிஷேகத்தின் முன்னதாக ஆயிரம் பிறை சந்திரனை தரிசித்த பெரியோர்களுக்கு சதாபிஷேகம் கூறப்படுகிறது.
3. உத்தராயணகாலத்தில் சுக்ல பக்ஷத்தில் சிறப்பான நல்ல லக்னமுடைய நல்ல கிழமை திதி இவைகளை உடைய நன்னாளில் சதாபிஷேகம் செய்து கொள்ளவேண்டும்.
4. அமைதியான குணம் எல்லா லக்ஷணங்கள் பொருந்திய ஆசார்யர் மங்களாங்குரம் செய்யப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திலோ
5. கொட்டகையிலோ பந்தலிலோ வளைந்து நீட்டமுள்ள தட்டு பந்தலிலோ அலங்கரிக்க பட்ட நல்ல மண்டபத்தில் ஐந்து முதல் ஐம்பத்தைந்து முழ அளவுள்ள இடத்தில்
6. நான்கு புறமும் அளவுடன் கூடிய நான்கு வாயில்களுடனும் நன்றாக அமைக்கப்பட்டு ஒன்று முதல் இருபத்தி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு அழகாக உள்ள மண்டபத்தில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.
7. அந்தணர், அரசர், வைச்யர், நான்காம் வர்ணத்தவர், அனுலோம பிறப்புடையவர்கள், தனிசிறப்புள்ள அரசர்கள்.
8. ராணி, அரசாங்க மந்திரிகள், அமைச்சர்கள், புரோகிதர்கள், அந்தந்த ஜாதியில் தோன்றிய பெண்களுக்குமோ சதாபிஷேகம் செய்து வைக்கலாம்.
9. (விபூதி) மோதிரம், தோள்வளை, அரைஞான் குண்டலம் யக்ஞோப வீதம் என்பதான ஐந்து அணிகலன்களுடன் கூடியதாக சதாபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகத்திற்கு முன் இரவில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.
10. ஆசார்யன் யஜமானனின் வலது கையில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். முதன்மையான ராணிக்கு இடதுகையில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.
11. முக்யமான மனைவி பல இருப்பின் அவர்களுக்கும் ரக்ஷõபந்தனம் செய்விக்க வேண்டும். அன்று இரவில் பால் அருந்தி கம்பளம் முதலான படுக்கியில்
12. தெற்கு பக்கம் தலைவைத்து தனிமையாக படுத்து உறங்க வேண்டும். முன்பு கூறப்பட்ட முறைப்படி மண்டபம் அமைத்து
13. சில்பியைத் திருப்தி செய்வித்து புண்யாஹ வாசனம் செய்ய வேண்டும். மேற்கிலிருந்து கிழக்கு நுனியாகவும் தெற்கிலிருந்து வடக்கு நுனியாகவும் பதினான்கு கோடுகள் கல்பிக்க வேண்டும்.
14. இவ்வாறு நூற்றி அறுபத்தி ஒன்பது பதங்களை உடைய மண்டபத்தை நன்கு அமைக்க வேண்டும். இந்த மண்டபத்தில் நடுவில் இருபத்தி ஐந்து பதங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
15. சுற்றிலும் எட்டுத்வாரத்துடன் கூடியதாக ஒவ்வொரு பதத்தைவிட்டு விட்டு த்வாரத்திற்காக எட்டு பதங்களை விட்டு நான்கு திசையிலும் இரண்டு பதங்களால் நான்கு த்வாரங்களை அமைக்க வேண்டும்.
16. இவ்வாறு மண்டலபதங்களை த்வாரம் மத்யபதம் இவைகளுக்கு எடுத்தது போக மீதமுள்ள பதங்கள் நூற்றி எட்டாகும். இருபத்தி ஐந்து பத மத்தியில் ஸ்தண்டிலம் அமைத்து இரண்டு மரக்கால் அளவு நெல்லை பரப்ப வேண்டும்.
17. வர்தநீ கும்பத்திற்கு அதில் பாதி நெல்லும் மற்ற கலசங்களுக்கு ஒரு மரக்கால் ஆகும். ஒரு மரக்கால் நெல் அதமம். இரண்டு மரக்கால் அளவு மத்யமமாகும்.
18. மூன்று மடங்கு அளவு உத்தமாகும் இவ்வாறு உத்தமாதிகளின் அளவு கூறப்பட்டு உள்ளது. ஒரு மரக்கால் அரை மரக்கால் கால்பாக மரக்கால் என்ற அளவு கீழ்தரமாகும்.
19. இந்த நெல் அளவானது கீழ்தரமான அளவென கூறப்பட்டுள்ளது. சாலி என்ற வகை உள்ள நெல் இல்லைஎனில் வ்ரீஹி என்ற நெல்லை உபயோகித்துக் கொள்ளவும் நெல் அளவின் பாதி அரிசியும்
20. அதில் பாதி எள்ளும் அல்லது அரிசியின் நான்கில் ஒரு பங்கு எள்ளுமோ ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்த வருமானமுள்ளவர்கள் எட்டில் ஒரு பங்கு ஸ்தண்டில த்ரவ்யங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
21. முப்பத்திரண்டு படி அளவு நீர்பிடிக்கும் கும்பத்தை நடுவில் சிவகும்பமாக வைக்க வேண்டும். சிவகும்ப நீரளவின் பாதி நீர் கொள்ளளவு கொண்ட கும்பத்தை வர்த்தனீ கும்பமாக ஸ்தாபிக்க வேண்டும்.
22. வெளியில் உள்ள கலசங்கள் நான்கு படி அளவுள்ள நீரில் கொள்ளளவு கொண்டதாக அமைக்க வேண்டும். ப்ரதான கலசங்களை முப்புரி நூலாலும் வர்த்தனிகளை இரண்டு இழை நூலாலும்
23. மற்ற கும்பங்களில் ஓர் இழை நூலாலும் சுற்ற வேண்டும். ஒவ்வொரு கும்பமும் தனித்தனியாக வஸ்திரம். தங்கத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
24. சந்தனம் அகில், பச்சகற்பூரம் கீழாநெல்லி, விளாமிச்சைவேர் கோரோஜனை வெண்கடுகு இவைகளை கலந்து நதிதீர்த்தங்களுடன் கும்பத்தை பூரணம் செய்வது உத்தமமாகும்.
25. பலவகையான வாசனைபொருட்கள் பலவித விதைகள் பலவகையான உலோகங்கள் பலவகையான தாதுக்கள் இவைகளோடு கும்பங்களை அமைக்க வேண்டும்.
26. பலதிசைகளில் இருந்து தயாரித்த மருந்துகள் பலவகைப் பழங்கள், புஷ்பங்கள் பசுவின் சம்பந்தப்பட்ட பால் தயிர் நெய் இவைகளோடு கூடியதாக கும்பத்தை அமைக்க வேண்டும்.
27. எல்லா கும்பங்களையும் ஸ்தாபித்து பத்திர புஷ்பங்களால் பூஜை செய்ய வேண்டும். ஸ்தாபித்த கும்பங்களின் பூஜையை நூற்றிஎட்டு ருத்ர நாமார்ச்சனைகளால் செய்ய வேண்டும்.
28. உத்தமமான ஆசார்யன் ஒவ்வொரு த்ரவ்யங்களையும் அந்தந்த அளவு ஸமர்ப்பிக்க வேண்டும். சிவகும்பத்தையும் வர்த்தனியும் இரு வஸ்திரங்களால் அலங்கரிக்க வேண்டும்.
29. ஒன்பது, ஐந்து எண்ணிக்கை உள்ள ரத்னங்களை சிவகும்ப சக்தி கும்பத்தில் சேர்க்க வேண்டும். மற்ற எட்டு கும்பங்களான முதல் ஆவரணத்தில் எட்டு லோஹங்களை சேர்க்க வேண்டும்.
30. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், துத்தநாகம் ஆகிய இவைகளை அஷ்டவித்யேஸ்வர கும்பங்களில் சேர்க்க வேண்டும்.
31. இரண்டாவது ஆவரணத்தில் (இவ்வாறாக) தாதுக்களை வைக்க வேண்டும். அகில், கந்தகம் அரிதாளம், தேன்மெழுகு, மனஸ்சிலை
32. பாதரசம், அப்ரம், கைரிகை, அஞ்ஜனம் (புனுகு, ஜவ்வாது) ஜாதிலிங்கம், சிந்தூரம், துத்தம், வெங்காரம், படிகாரம்
33. காந்தம் ஆகிய பதினாறுவிதமான பொருட்கள் இரண்டாவது ஆவரணத்தில் வைக்க வேண்டும். கிழக்கிலுள்ள பன்னிரண்டு கோஷ்டங்களில் இரண்டு பக்கமான த்வாரத்தில் இருப்பதாக அமைக்க வேண்டும்.
34. புரசு, கருங்காலி, மாகரம், இச்சி, ஆல், வில்வம், வன்னி, காட்டுவாழை, அரசு இவற்றிலிருந்து உண்டானதும்
35. அத்தி, நார்த்தை, மாதுளவ்ருக்ஷம் ஆகிய இந்த மரங்களின் பட்டைகளை கலசத்திற்குள் வைத்து பூஜிக்க வேண்டும். உள்பக்கம் வாமாதி ருத்ரர்களை பூஜிக்க வேண்டும்.
36. தென்கிழக்கு திசையில் உள்ள ஒன்பது கலசங்களில் ம்ருத்திகைகளை வைக்க வேண்டும். ஆற்றுமண், மாட்டு தொழுவ மண், புற்றுமண், யானை தந்த மண்
37. கடல் மண், உழுத வயல் மண், மலை மண், அரசமரத்தடி மண், புனிதமான இடத்து மண், இவைகளை கும்பத்தில் சேர்க்க வேண்டும். வெள்ளை ஆம்பல், நீலோத்பலம், வெண்தாமரை, செந்தாமரை
38. மகிழம்பூ, அரளிப்பூ, பாதிரிப்பூ, கொக்கு, மந்தாரை, ஜாதி முல்லை, (மல்லிகை) நந்தியாவட்டை பூ இவைகளையும்
39. செண்பகப்பூ ஆகிய பனிரெண்டு புஷ்பங்களை பனிரெண்டு கும்பங்களில் (தெற்கு திசையில்) சேர்க்க வேண்டும். சந்தனம், விளாமிச்சை வேர், கீழாநெல்லி குங்குமப்பூ, கற்பூரம்
40. தக்கோலம், அகில், கிராம்பு, லவங்கப்பட்டை, இவைகளை தென்மேற்கு ஒன்பது கும்பங்களில் வைக்க வேண்டும். மேற்குதிசையில் வைக்க வேண்டியவைகளை இனி கூறுகிறேன்.
41. மூங்கில் அரிசி, உளுந்து கோதுமை, நீண்ட நெல், நாயுருவி, எள், பயறு தினை, வெண்கடுகு, நீவாரம் (ஓர் வகை நெல்)
42. சாமை, துவரை இவைகளை வரிசையாக மேற்குதிக்கில் வைக்க வேண்டும். தாமரை, சங்கு புஷ்பம், விஷ்ணுக்ராந்தை, ஹம்ஸ புஷ்பம்
43. துளசி, செங்கழுநீர் பூ, இந்திரவல்லி, தாமரை, சூர்யாவர்த்தம் இந்த ஒன்பதும் வடமேற்கு திசையில் வைக்க வேண்டும்.
44. பஞ்சகவ்யம், பசுவின் பால், தயிர், கோமூத்ரம், கோசாணம், இளநீர், மாதுளம்பழம், இவைகளும்
45. நார்த்தம்பழம், வில்வம், பலாப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம் இவைகளை வடக்கில் வரிசையாக கும்பங்களில் வைக்க வேண்டும்.
46. வடகிழக்கு திசையில் ஒன்பது கலசங்களில் வாசனை உள்ள தீர்த்தங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறாக த்ரவ்யங்களை நிரப்பி சிவன் முதலானவர்களை அர்ச்சிக்க வேண்டும்.
47. மூர்த்திபர்களுடன் ஆசார்யன் ஸ்நானம் செய்து விபூதி ருத்ராக்ஷம் அணிந்து புத்தாடை கட்டிக் கொண்டு அங்கவஸ்திரம் தலைப்பாகையுடன்
48. மோதிரம் முதலான பஞ்சாங்க பூஷணங்களுடன் கூடி மண்டபத்தின் த்வாரபூஜை முதலியவைகளை செய்ய வேண்டும்.
49. நடுவில் உள்ள கும்பத்தில் சிவபெருமானை ஸாங்கோபாங்கமாக பூஜிக்க வேண்டும். ஒரே மனைவி இருந்தால் ஒரு வர்த்தனி கும்பத்தில் மனோன்மணியை பூஜிக்க வேண்டும்.
50. பல மனைவிகள் இருப்பின் அவர்களுக்கு உண்டான பூஜையை பல வர்த்தனி கும்பத்தில் மனோன்மணியையோ பூஜிக்க வேண்டும். சதாபிஷேகம் செய்து கொள்ளும் அரசன் தீøக்ஷ செய்து கொள்ளாமல் இருப்பின் அந்த காலத்தில் தீøக்ஷ செய்யப்படவேண்டும்.
51. மண்டலத்தில் கிழக்கிலோ, ஈசான்ய திக்கிலோ வடக்கிலோ, தெற்கிலோ ஹோமகுண்டம் அமைக்க வேண்டும்.
52. பிறகு இவ்வாறாக செய்யாமல் சிவகும்பத்தை மட்டுமாவது பூஜித்து தீøக்ஷக்கு புஷ்பம் போடுவது முதலியவைகளை செய்து விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும்.
53. சந்தனம், புஷ்பம், தூபம், தீபம் மற்றும் விசேஷமான மற்ற உபசாரங்கள் செய்து நவாக்னி பஞ்சாக்னி அல்லது ஏகாக்னியையோ கல்பித்து பூஜிக்க வேண்டும்.
54. சமிது நெய், ஹவிஸ், பொறி, எள், மூங்கில் அரிசி, உளுந்து, மற்ற ஹோமத்திற்கு உரியதான த்ரவ்யங்களை முறைப்படி வித்வான் ஹோமம் செய்ய வேண்டும்.
55. அத்தி ஆல், அரசு இச்சி இவைகளை இந்த்ராதி திக்குகளிலும் வன்னி, கருங்காலி நாயுருவி பில்வ்ருக்ஷம் சமித்து முதலியவைகளை ஆக்னேயாதி திக்குகளிலும்
56. புரசு சமித்தால் ப்ரதாந குண்ட ஹோமம் செய்ய வேண்டும். சிவமந்திரம் ஈசனாதி பிரம்ம மந்திரம் ஹ்ருதயம் முதலான அங்க மந்திரம் இவைகளால் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். தேவிக்கு பிரதான குண்டத்தில் எல்லா த்ரவ்யங்களையும் ஹோமம் செய்யவேண்டும்.
57. மூலமந்திரத்தால் நூறு, அல்லது ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து என்ற எண்ணிக்கையால் ஹோமமும் பிரம்ம மந்திர அங்கமந்திரங்களால் பத்தில் ஒரு பாகம் தனித்தனியே ஹோமம் செய்ய வேண்டும்.
58. முறைப்படியே ஹோமம் செய்து இரவு பொழுதை கழித்து பிறகு குருவானவர் அந்த சதாபிஷேக கர்த்தாக்களுக்கு பிரதான அக்னியில் தீøக்ஷ செய்விக்க வேண்டும்.
59. சதாபிஷேகம் செய்து கொள்ளும் கர்த்தா தீøக்ஷ பெறப்படாதவராக இருப்பின் சிவகும்பத்தில் சிவனை பூஜிக்க வேண்டும். பஞ்சாக்ஷரத்தினால் சிவாயை நம: என்று
60. வர்த்தனி கலசத்தில் கவுரியையும் பூஜிக்க வேண்டும். மற்ற கலசங்களில் பஞ்சாக்ஷர மந்திரத்தோடு கூடியதாக ருத்ரனை அர்ச்சிக்க வேண்டும்.
61. தீøக்ஷக்காக நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்து தீøக்ஷ தர்சனத்திற்கு எல்லா பாபத்தை போக்குவதற்காக ஸர்வதோபத்ரம் என்ற மண்டலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.
62. விரும்பிய பயன் எல்லாவற்றையும் அடைவதற்காகவும் மிகவும் நன்கு ஒளிமயமான வாழ்க்கை அமையவும் யோக்யமான ஆடை ஆபரணங்களால் அலங்கரித்தும் காலை ஸ்நானம் செய்து
63. எல்லா அலங்காரத்துடன் கூடி சதாபிஷேக மண்டபத்திற்கு கர்த்தாவை அழைத்து வரவும். கால்களை சுத்தி செய்து கொண்டு ஆசமனம் செய்து அமைதியானமனம் உடையவராக
64. அழைத்து சென்று ஓம்காரத்தினால் தெற்கு வாயிலை பிரோக்ஷித்து அந்த கர்த்தாவினாலேயே புஷ்பாஞ்சலியையும் வலம் வந்து நமஸ்கரிப்பதையும்
65. செய்யச்சொல்லி கும்பம், மண்டலம், வஹ்நி இவைகளில் இருக்கும் சிவனை பூஜித்து ஸ்நான வேதிகையில் ஆசார்யன் கீழ் கூறும் லக்ஷணம் உள்ள பீடத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.
66. பாலுள்ள மரத்தில் உண்டானதும் மாமரம், பலாமரம், வில்வமரம், நாவல்மரம், அரசமரம், இவைகளினால் ஆன பத்ர பீடத்தில் கர்த்தாவை அமர்த்த வேண்டும்.
67. சதாபிஷேக கர்த்தா அரசனாக இருப்பின் ஸஹஸ்ரதாரை பாத்திரத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு நூறுத்வாரமுள்ள சததாரை பாத்திரத்தால் அபிஷிக்க வேண்டும்.
68. தங்கம், வெள்ளி அல்லது வேறு உயர்ந்த உலோகமுடைய தாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்த்தாவை எல்லா விதமான அலங்காரத்துடன் கூடியதாக செய்து நெல்லிமுல்லி முதலானவைகளால்
69. மற்ற ஸ்நான த்ரவ்யங்களாலும் ஸ்நானம் செய்வித்து உடம்பிலுள்ள நீரை நல்ல வஸ்திரத்தால் நன்கு துடைத்து கொண்டு அணிந்த வஸ்திரங்களை அவிழ்த்து விட்டு
70. சந்தனம் முதலியவைகளால் உடலில் பூசி வாசனை புஷ்பங்களால் அலங்கரித்து சாணம் மெழுகி அலங்கரிக்கப்பட்ட சுபமான வேறு இடத்தில்
71. ஸ்தண்டிலம் கல்பித்து அங்கே பத்ராஸநத்தை அமைக்க வேண்டும். புலித்தோல் நல்ல வஸ்திரம் ஆகியவைகளை தங்கத்தாமரையும் பத்ராசனத்தில் மேல் வைத்து
72. நடுவில் மனைவியுடன் கூடியதாக அபிஷேகம் செய்யப்பட்டவனை நடுவில் ஸ்தாபிக்க வேண்டும். அந்த கர்த்தாவை ஆசமனம் செய்யச் சொல்லி மந்திரமய சரீரமாக்கி சந்தனம் முதலியவைகளாலும் பலவித மாலைகளாலும்
73. வாசனை உள்ள புஷ்பங்களாலும் எல்லா அலங்காரத்துடனும் அலங்கரித்து பெரிய வஸ்திரத்தால் போர்த்தி அவன் முன்னிலையில் மெழுகப்பட்ட
74. இடத்தில் எல்லா தான்யங்கள் தங்கத்தால் ஆன தேன் பாத்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும். பால் கறக்க கூடியதும் கூடியபசுவை பார்க்கச் சொல்ல வேண்டும்.
75. பந்துக்களால் பூஜை செய்யப்பட்டவரும் சந்தோஷம் உடையவராக வஸ்திரம் ஸ்வர்ண மோதிரம் ஸ்வர்ண புஷ்பம் இவைகளாலும் மத்தளம், பாட்டு வாத்யம் இவைகளுடன் கூடி
76. பல்லக்கில் ஏறி கிராமப்ரதட்சிணத்தை செய்து மாளிகையின் வாசற்படியிலோ அதற்கு முன்னதாகவோ மெழுகப்பட்டதும் அங்குரார்ப்பணத்துடன்
77. பூர்ணகும்பம், தீபம் இவைகளுடன் கூடி பலகையின் மேல் அமர்த்தி அவரின் பாதங்களை பால் ஜலம் இவைகளினால் அலம்ப வேண்டும்.
78. பின்னர் தீபத்தோடு மஞ்சள் தீர்த்தத்தை ஸ்திரீகள் தெளித்து கொண்டு 3 முறை வலம் வருதல் வேண்டும்.
79. பிறகு பாதுகையோடு தன் கிருஹத்தில் பிரவேசிக்க வேண்டும். நாற்பத்தி ஒன்பது கலசம் அல்லது மேற்கூறியபடி நூறு கலசங்கள் வைத்து பூஜிப்பது ச்ரேஷ்டமானதாகும்.
80. இருபத்தி ஐந்து கலசம் அல்லது ஒன்பது கலசம் அல்லது ஐந்து கலசங்களாலோ அல்லது ஒரே கலசத்தாலோ அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.
81. பிறகு உயர்ந்த உத்தமான சம்பாவணையாகவும் வேலைக்காரி, வேலைக்காரன், பூமி பசு வீடு மற்றும் உபகரணங்களை குருவிற்கு தட்சிணையாக கொடுக்க வேண்டும்.
82. பின்னர் ஆசார்யர்களுக்கும், ஜபம் செய்த அந்தணர்களுக்கும் ஸ்தோத்திரம் சொன்னவர்களுக்கும், பக்தர்களுக்கும் முன்பு கூறியபடி தட்சிணையை அளிக்க வேண்டும்.
83. தன் தகுதிக்கு ஏற்றவாறு பூஜைகள் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு எந்த கர்த்தாவானவர் சதாபிஷேகம் செய்கிறாரோ அவர் தர்மத்தில் நிலைபெற்ற மதியுடன் பூவுலகில் விளங்குகிறார்.
84. இந்த லோகத்தில் தனவானாகவும் குழந்தைகள் உள்ளவராகவும் வெற்றியுடன் கூடியதாகவும், ஆயுள், ஆரோக்யம், கார்யசித்தி மனைவி மக்களுடன் இருந்து மேலான கதியை அடைகிறார்.
85. எந்த இடத்தில் இந்நாட்டில் முறைப்படி சதாபிஷேகம் செய்யப்படுகிறதோ அவருக்கு அக்கால ம்ருத்யு இல்லை. பாபம் செய்பவனும் இருக்க மாட்டான். ஐஸ்வர்யமின்மையும் ஏற்படாது.
86. எங்கும் பயமில்லை, சத்ரு முதலியவரால் துன்பம் இல்லை. உரிய காலத்தில் மழை பெய்ய கூடியதாக மேகமும் சுபிக்ஷமும் அரசன் வெற்றியை உடையவனாகவும் எல்லா உயிர்களும் அமைதியாகவும் பசுக்கள் பால் நிறைந்தவைகளாகவும் நல்ல பயன்கள் ஏற்படும்.
இவ்வாறு உத்தரகாமிகாமக மஹாதந்திரத்தில் சதாபிஷேக முறையாகிற இருபத்தியாறாவது படலமாகும்.