மதுரை : திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கலசங்கள் பத்மநாபபுரம் அரண்மனை அருகே கருவூலத்தில் பாதுகாக்கப்படுகிறது. அவற்றை புதுப்பித்து குடமுழுக்கு நடத்தப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
திருவட்டார் ஆதிகேசவ பக்தர்கள் சேவா டிரஸ்ட் செயலாளர் தங்கப்பன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் பழமையானது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இக்கோயிலை அறநிலையத்துறை முறையாக பராமரிக்கவில்லை. இதற்கு நீண்டகாலமாக குடமுழுக்கு நடத்தவில்லை. குடமுழுக்கு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் நிதி ஒதுக்கி, கோயிலில் புனரமைப்புப் பணி நடக்கிறது. ஆகம விதிகளை பின்பற்றாமல் கோயில் கும்ப கலசங்களை அகற்றியுள்ளனர். அவை 700 ஆண்டுகள் பழமையானவை. தற்போது எங்கு பராமரிக்கப்படுகிறது என தெரியவில்லை. சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கும்ப கலசங்கள் நல்ல நிலையில் இருந்தால் அவற்றை புதுப்பித்து குடமுழுக்கின்போது பொருத்த வேண்டும். நல்ல நிலையில் இல்லையெனில் புதுப்பித்து கோயில் வளாகத்தில் பாதுகாக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தங்கப்பன் குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.கன்னியாகுமரி தேவசம் போர்டு இணைக் கமிஷனர் தரப்பு, பத்மநாபபுரம் அரண்மனை அருகே அரசு கருவூலத்தில் கலசங்கள் பாதுகாக்கப்படுகின்றன. 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலசங்களை புதுப்பித்து குடமுழுக்கு நடத்தப்படும், என உத்தரவாதம் அளித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்தனர்.