பதிவு செய்த நாள்
04
ஜூன்
2021
10:06
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு, நிவாரண உதவித்தொகை, 4,௦௦௦ ரூபாய், 10 கிலோ அரிசி மற்றும், 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் மாத சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இதர பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்க, உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கோவில் பணியாளர்களுக்கு, உதவித்தொகை, அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.திருமுல்லைவாயில், பிடாரி எட்டியம்மன் கோவில், பிடாரி பொன்னியம்மன் கோவில்; சென்னை, பூங்காநகர், கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவில், அத்திப்பட்டு கிருஷ்ணசாமி பெருமாள் கோவில், சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில், பைராகிமடம் திருவேங்கட முடையார் வெங்கடேசப் பெருமாள் கோவில் ஆகியவற்றில் பணியாற்றும், 12 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு, ஊக்கத்தொகை, அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.ரேஷனில், அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா பாதிப்பு நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய்; அத்தியாவசிய, 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டமும், நேற்று துவக்கி வைக்கப்பட்டது.தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் அறிக்கையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கருணாநிதி பிறந்த நாளான, ஜூன், 3 முதல், 4,000 ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தி.மு.க., ஆட்சி அமைத்ததும், கொரோனா நிவாரணத் தொகை, முதல் தவணையாக, 2,000 ரூபாய், 2.09 கோடி ரேஷன் அரிசி கார்டுதார்களுக்கு, மே மாதம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இம்மாதம், 4,196.38 கோடி ரூபாய் செலவில், 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.அத்துடன், அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு, 844.51 கோடி ரூபாய் செலவில், அத்தியாவசிய, 14 மளிகை பொருட்கள் அடங்கிய, மளிகை தொகுப்பு வழங்கும் திட்டமும் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பெரியசாமி, சக்கரபாணி, தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி., திரிபாதி, செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன், அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலர் முகமது நசிமுதீன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.