மலையில் கண்டெடுக்கப்பட்டது 18ம் நூற்றாண்டை சேர்ந்த பீரங்கி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2021 06:06
வேலூர்: வேலூர் மலையில், கண்டெடுக்கப்பட்ட பீரங்கி, 18 ம் நூற்றாண்டை சேர்ந்தது, என, அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் கூறினார்.
வேலூர் சைதாப்பேட்டையில் நாமக்கார மலையில் மண்ணில் புதைந்திருந்த பீரங்கி கடந்த மாதம் 31ல் கண்டெடுக்கப்பட்டது. வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் பீரங்கியை ஆய்வு செய்த பின்னர் கூறியதாவது: வேலூர் கோட்டை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு படை தளத்தை அமைத்து ஜலகண்டேஸ்வரர் கோவில் பாதாள அகழியில் வெடி மருந்து கிடங்கு அமைத்திருந்தனர். வேலூரில் வடகிழக்கில் இருந்து, தென்கிழக்காக செல்லும் ஐந்து மலைகளில் கோட்டைகள், வாச் டவர் அமைத்து கண்காணித்து வந்தனர். இதில் சைதாப்பேட்டை நாமக்கார மலையம் ஒன்று. இந்த மலைகளில் நிறைய பீரங்கிகளை வைத்திருந்தனர். நாமக்கார மலையில் பெய்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு இரும்பு பீரங்கி வெளியே தெரிந்தது. இரும்பினால் ஆன இந்த பீரங்கி 18 ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஒன்பது அடி நீளமும், மூன்று அடி அகலமும், இரண்டு டன் எடையும் உள்ளது. இதை கீழே எடுத்து வருவதா, மலையிலேயே பாதுகாப்பாக வைத்திருப்பதா என மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.