ஆரோக்கிய வாழ்வுக்கு முதல் படியே பசித்த பிறகு உண்பது தான். பசியோடு சாப்பிடாமல் இருப்பது உடலுக்குத் தீங்கானது. பசி இல்லாதபோது சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு எதிரானது. தனக்கு என்ன வேண்டும் என்பதை, உடல் சொல்லிக்கொண்டே இருக்கும். உடலுக்கு உணவு வேண்டுமென்றால், பசி மூலமும் தண்ணீர் வேண்டுமென்றால் தாகம் மூலமும் உணர்த்தும். பசியில்லாத நேரங்களில் உடலுக்குள் செல்லும் உணவு, கழிவாக மாறி, ஆற்றல் அளிக்காமல் வெளியேறிவிடுகிறது. பசித்த பிறகு உண்ணும் போது தான் உடலின் தேவை நிறைவேறுகிறது. ஒரு சமயம் முகவ்கிஸ் எனும் எகிப்திய மன்னர், நாயகத்திற்கு பரிசுகளை அனுப்பினார். அந்த பரிசுகளில் ஒன்றாக ஒரு மருத்துவரும் வந்தார். அந்த மருத்துவர் மதினாவிற்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் அவரிடம் ஒருவரும் வைத்தியம் பார்க்க வரவில்லை. தான் ஒரு அன்னியர் என்பதால் யாரும் வைத்தியம் பார்க்க வரவில்லையோ என எண்ணி வேதனைப்பட்டார். நாயகம் அந்த மருத்துவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி, ‘‘மருத்துவரே! நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள். இறைவனின் அருளால் உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படவில்லை. ஏனெனில் திருக்குர்ஆனின் போதனைப்படி நாங்கள் பசித்த பின்னரே உண்போம். அதுவும் குறைந்த அளவே உண்போம். ஆகவே நோய் எங்களிடம் அண்டுவதில்லை’’ என்றார். பசி, தாகம், துாக்கம் போன்றவை நம் உடலின் அடிப்படைத் தேவைகள். இதை உணர்ந்து செயல்பட்டால் நோயில்லா வாழ்வு வாழலாம்.