ஒரு செல்வந்தர் படித்த பள்ளிக்குச் சென்றார். அப்போது அவர் பையில் தங்கக் காசுகளையும், ஒரு புத்தகமும் கொண்டு சென்றார். நன்றாக படிக்கும் மாணவருக்கு பரிசு கொடுக்க எண்ணினார். தன் எண்ணத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்து ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜையின் மீது தான் கொண்டு வந்த தங்கக்காசுகள், புத்தகத்தை வைத்தார். ‘‘நான் இதை உங்களுக்கு தருவதாக இருந்தால் எதைக் கேட்பீர்கள்’’ என்று மாணவர்களை பார்த்து கேட்டார். பல மாணவர்கள் முந்திக் கொண்டு ‘‘தங்க காசுகளை தான் கேட்போம்’’ என்றனர். ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்று ‘‘ஐயா.. அறிவே உலகில் சிறந்தது. அதனால் புத்தகத்தையே கேட்பேன்’’ என்றான். செல்வந்தரும் மகிழ்ச்சியுடன் அதைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! அதன் ஒவ்வொரு பக்கமும் தங்கத் தகட்டால் செய்யப்பட்டு, அதில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. தங்கக்காசுகளை விட பல மடங்கு எடை கொண்டதாக அந்தப் புத்தகம் இருந்தது. பேராசைப்படாமல் இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழுங்கள்.