பதிவு செய்த நாள்
07
ஜூன்
2021
12:06
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் வாசலில், சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணியை, தி.மு.க.,வினர் வழங்கியதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சமீபத்தில், கருணாநிதியின், 98வது பிறந்த நாளை, தி.மு.க.,வினர் கொண்டாடினர். கோவிட் பரவல் காரணமாக, கட்சியினர் தங்களது வீடுகளில் பிறந்த நாளை கொண்டாடும்படி, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், சென்னை, ஆயிரம் விளக்கு பகுதி, ராயப்பேட்டை, 118வது கிழக்கு வார்டில் அமைந்துள்ள, சீனிவாச பெருமாள் சன்னதி தெருவில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வாசலில், கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, சமீபத்தில், அப்பகுதி மக்களுக்கு, சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்காக, கோவில் வாசலை அடைத்து, விளம்பர பேனர் வைத்துள்ளனர்.
தி.மு.க., - எம்.பி., தயாநிதி, ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., எழிலன், பகுதிச் செயலர் அன்புதுரை, பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.ராஜ், வட்ட செயலர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பிரியாணியை வாங்க வந்தவர்கள், முகக் கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியும் கடைப்பிடிக்காமல், மிக நெருக்கமாக நின்று, பிரியாணி வாங்கி சென்றனர். பெருமாள் கோவில் முன் அசைவ உணவு வழங்கியது, அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அதிர்ச்சியையும், பக்தர்களுக்கு மன வேதனையையும் அளித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம. ரவிக்குமார்: பிரியாணி பொட்டலம் கொடுக்க, பெருமாள் கோவில் ஒன்றும் அறிவாலயம் கிடையாது. ஆண்டவன் வாழும் கோவிலின் வாசலை மறைத்து, பேனர் வைத்து, பிரியாணி பொட்டலம் வழங்கியவர்கள், நாளை கோவிலுக்கு உள்ளேயே சமபந்தி போஜனம் எனக் கூறி, பிரியாணி போட்டாலும் ஆச்சரியமில்லை. பெரும்பான்மை பெற்றுவிட்டோம் என, ஆட்சிக்கு வந்தவுடன், தங்கள் ஹிந்து விரோத மனப்பான்மையை காட்ட துவங்கி உள்ளனர். பிரியாணி பொட்டலம் கொடுப்பதை, நாங்கள் எதிர்க்கவில்லை. பெருமாள் கோவிலுக்கு முன், கோவில் வாசலை மறைத்து கொடுப்பதை தான் எதிர்க்கிறோம்.
டி.ஆர்.எஸ்., சமூகசேவை அமைப்பின் நிறுவனர் டி.ஆர்.சீனிவாசன்: பெருமாள் கோவில் வாசலை அடைத்து, மேடை அமைத்து, கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடியது மட்டுமல்லாமல், சிக்கன், மட்டன் பிரியாணி வழங்கியது, ஹிந்துக்களையும், ஹிந்து கடவுள்களையும் இழிவுப்படுத்தி உள்ளது. ஆட்சி அமைத்து, ஒரு மாத காலம் கூட ஆகவில்லை. அதற்குள் அநாகரிக செயலில் ஈடுபடும் கட்சியினரை, முதல்வர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
தி.மு.க., நிர்வாகி பாலு நீக்கம்!: சென்னை, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலு. தி.மு.க., முன்னாள் வட்ட செயலரான இவர், தற்போது, மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சங்கரநேந்தரலயா மருத்துவமனையில் பணிபுரியும் கண் டாக்டர் ஒருவரிடம், கட்டுமானம் பணி தொடர்பாக, மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்த தகவல், முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், பாலுவை, கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.