பதிவு செய்த நாள்
18
ஜூன்
2021
02:06
திருப்பூர்: காங்கேயம், சிவியார்பாளையம் பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 69.81 ஏக்கர் நிலத்தை, ஹிந்து அறநிலையத் துறையினர் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா சிவியார்பாளையத்தில் பரமசிவன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாரிகளால், இக்கோவிலும் நிர்வகிக்கப்படுகிறது.கோவிலுக்கு சொந்தமான 72.86 ஏக்கர் புன்செய் நிலம், சென்னிமலை - காங்கேயம் ரோட்டில் உள்ளது. இதில் 69.81 ஏக்கரை, 20 ஆண்டுகளாக 19 பேர் ஆக்கிரமித்திருந்தனர். இதன் மதிப்பு 20 கோடி ரூபாய்.
கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், இடத்தை காலி செய்ய வேண்டும் எனவும், 2018 மார்ச்சில் ஹிந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை கமிஷனர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பினார்.அதன்பின்னும், ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தை விட்டு வெளியேறவில்லை. இந்நிலையில், நேற்று திருப்பூர் மண்டல இணை கமிஷனர் நடராஜன், உதவி கமிஷனர் வெங்கடேஷ் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 69.81 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.