பதிவு செய்த நாள்
18
ஜூன்
2021
03:06
அவிநாசி: அவிநாசி அருகே, சேவூர் கிளாகுளம் பகுதியில், பழமையான கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. அவிநாசி அருகே சேவூர் ஊராட்சிக்குட்பட்ட கிளாகுளம் கிராமத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் இருந்துள்ளது. இக்கோவில், இடித்து, தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது, அப்பகுதியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பொதுமக்கள் சிலர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியுள்ளதாவது; இக்கோவில் நூறாண்டு பழமை வாய்ந்தது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதன்பின், கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலையும், சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கற்களும் கோவிலின் வெளியே வைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த கோவில் இடித்து, தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறியிருந்தனர்.
வருவாய்த் துறையினர் கூறியதாவது: கோவில் மிகவும் பழமையானதாக இருந்ததால் அதை புதுப்பித்து கட்டும் நோக்கில் இடித்ததாக கிளாக்குளம் மக்கள் கூறுகின்றனர். ஆனால், வேறு தரப்பு மக்கள், வீட்டுமனை அமைக்கும் நோக்கில் அக்கோவிலை இடித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதுகுறித்து, தாசில்தார் முன்னிலையில் நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு தான், இக்கோவில் இடிக்கப்பட்டதன் காரணம் தெளிவாக தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.