மதுரை: தமிழகத்தில், கோவிட் தாக்கம் முற்றிலும் இல்லை என்ற நிலை எப்போது வருகிறதோ, அப்போது அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு, பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 24 வயது கோவில் யானை பார்வதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். தமிழகத்தில், கோவிட் தாக்கம் முற்றிலும் இல்லை என்ற நிலை எப்போது வருகிறதோ, அப்போது அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு, பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வேகமாக பாதிப்பு குறைந்து வருகிறது. கோயில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை. மற்றபடி அனைத்து பூஜைகளும் தடையின்றி நடந்து வருகிறது. பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்ற காரணத்தினால், கோயில் நகை பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட முடியாது. தீவிபத்தினால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.