தினமும் திருப்பதி வெங்கடேசரை தரிசிப்பதை பணியாகக் கொண்டவர் முனிவர் பத்மநாபர். பழங்கள் மட்டுமே அவரது உணவு. 12 ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அங்கிருந்த குளக்கரையில் பிரகாசமான ஒளி அவர் முன் தோன்றிட வெங்கடேசர் காட்சியளித்தார். “பத்மநாபா! இந்த குளக்கரையில் தங்கியிரு. உரிய காலத்தில் என்னை சேரும் பாக்கியம் பெறுவாய்” என்று வரம் அளித்து மறைந்தார். ஒருநாள் அரக்கன் ஒருவன் அவரை உணவாக்கும் எண்ணத்துடன் துரத்தினான். “ஏழுமலை வெங்கடேசா! என்னைக் காப்பாற்று” என்று முனிவர் கதறவே, பெருமாளும் தன் சக்கரத்தை ஏவினார். அது அரக்கனின் தலையைக் கொய்தது. சக்கரத்தின் மகிமையை அறிந்த முனிவர்,“ என் உயிர் காத்த சக்கரமே! இன்று முதல் இந்த குளத்தில் எழுந்தருளி இதில் நீராடுவோரின் துன்பம் தீர்க்க வேண்டும்” என்று வேண்டினார். அதன்படியே அந்த குளம் சக்கர தீர்த்தம் என திருப்பதியில் இன்றும் இருக்கிறது. பெருமாளின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என வணங்குகிறோம். பத்மனாப முனிவரின் வரலாற்றைப் படிப்போருக்கு திருப்பதி போகாமலேயே அத்தீர்த்தத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.