ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமர் இலங்கை மன்னராக விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.
ராமேஸ்வரம் கோயில் தல வரலாறு குறித்து பக்தர்களுக்கு விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது.ராமாயண வரலாற்றில் சீதையை விடுவிக்க இலங்கை மன்னர் ராவணனிடம் தம்பி விபீஷணன் வலியுறுத்தியும் கேட்காததால், அவமரியாதையான விபீஷணர் அங்கிருந்து வான்வழியாக தனுஷ்கோடி வந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த ராமர், இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து அவருக்கு கடல் நீரை ஊற்றி பட்டாபிஷேகம் சூட்டினார். இதனை நினைவு கூறும் விதமாக 2ம் நாள் விழாவான நேற்று கோயிலுக்குள் எழுந்தருளிய விபீஷணருக்கு புனித நீர் ஊற்றி, ராமர் பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்வை கோயில் குருக்கள் நடத்தினர். பின் ராமர், விபீஷணருக்கு மகா தீபாராதனை நடந்தது. கோயில் இணை ஆணையர் பழனிக்குமார், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் பலர் பங்கேற்றனர்.